ஹாலிவுட்டுக்குப் பெயர்போன அமெரிக்காவுக்கும் சென்னையில் உள்ள அவ்வை சண்முகம் சாலைக்கும் என்ன சம்பந்தம். அந்தத் தொடர்பை ஏற்படுத்தியது திரைத் துறை என்ற கலையும், அந்தத் துறையின் மகத்தான கலைஞர்களான ராபின் வில்லியம்ஸும் கமல்ஹாசனும்தான்.
அவ்வை சண்முகிக்கு முன்னோடி:
ராபின் வில்லியம்ஸ் நடிப்பில் 1993ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் நகைச்சுவைப் படமான மிஸ்செஸ் டவுட்ஃபயர் (Mrs.Doubtfire) படத்தின் தழுவலில்தான், 1996ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் அவ்வை சண்முகி படம் வெளியானது. ராபின் வில்லியம்ஸின் நகைச்சுவைக்கு தீவிர ரசிகரான கமல்ஹாசன் டவுட்ஃபயர் படத்தில் ராபின் திரையில் பெண்ணாக மாறி செய்த அட்டகாசத்தை நாமும் தமிழ் சினிமாவில் செய்து பார்த்தால் என்ன வேட்கை கொண்டார்.
ரசிகர்களின் மனதையும் தேசிய விருதையும் ஒருசேர அள்ளிக்கொண்டு போனார். நாம் அனைவரும் வியந்து பார்க்கும் உலக நாயகனான கமல்ஹாசனே வியந்து ரசிக்கும் உலகக் கலைஞனாக திரைத் துறையில் உச்சத்தைத் தொட்டவர்தான் ராபின் வில்லியம்ஸ்.
ராபினின் ஆரம்ப நாட்கள்:
1951ஆம் ஆண்டு சிகாகோ நகரில் பிறந்த ராபின் மெக்லாரின் வில்லியம்ஸ் நடிப்பின் மீதிருந்த ஆர்வம் காரணமாகக் கல்லூரி படிப்பைப் பாதியிலேயே துறந்து நாடகப்பள்ளியில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றார். அவரின் பயிற்சி காலத்தில்போது நடிப்பு பயிற்சியுடன் சேர்த்து ஆங்கிலம், ருஷ்ய மொழி, இத்தாலிய மொழி, ஐரிஷ், ஸ்காடிஷ் பேச்சுவழக்கை எனப் பன்மொழி பேச்சுத் திறமையையும் விரைவாகப் பயின்றார். இவரின் திறமையைக் கண்டு பயிற்சிப் பள்ளி ஆசிரியரும் சக மாணவர்களும் மிரண்டுபோயினர் என்றே கூறலாம்.
திரைத் துறையில் என்ட்ரி:
பயிற்சிக்குப்பின் ஸ்டேன்ட் அப் காமெடியனாக சில ஆண்டுகள் வலம்வந்த ராபினுக்கு 1977ஆம் ஆண்டு திரைத் துறையில் முதல் வாய்ப்பு கிடைத்தது. 'Can I do It' என்ற படத்தில் சிறு வேடம் மூலம் அறிமுகமான ராபின் வில்லியம்ஸ், பாப்பாய் (Popeye) படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமானார்.
1987இல் ராபின் நடிப்பில் வெளிவந்த 'குட்மார்னிங் வியட்நாம்' என்ற திரைப்படம் அவர் திரை வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் பரிந்துரையை குட்மார்னிங் வியட்நாம் படம் அவருக்குப் பெற்றுத் தந்தது.
தொடர்ச்சியாக பதித்த வெற்றித் தடங்கள்:
பின்னர் டெட் போயட் சொசைட்டி (Dead Poet Society), அவேக்னிங் (Aweakening), தி பிஷ்சர் கிங் (The Fisher King), குட் வில் ஹன்ட்டிங் (Good will Hunting), மிஸ்செஸ் டவுட்ஃபயர் (Mrs.Doubtfire), ஜுமான்ஜி (Jumanji), தி நைட் அட் மியூசியம் (The Night at Museum) எனத் தொடர் வெற்றித் திரைப்படங்களில் நடித்தார்.
இவற்றில் ஜுமான்ஜி, தி நைட் அட் மியூசியம், குட் வில் ஹன்ட்டிங் போன்ற படங்கள் ஹாலிவுட் படங்களை விரும்பி பார்க்கும் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக, ஜுமான்ஜி, தி நைட் அட் மியூசியம் ஆகிய பேன்டசி கலந்த நகைச்சுவை என்பதால் சிறு வயது ரசிகர் பட்டாளத்தை மேற்கண்ட படங்கள் பெற்றது.
1998ஆம் ஆண்டு குட் வில் ஹன்ட்டிங் படத்திற்காக ஆஸ்கர் வென்ற ராபின் வில்லியம்ஸ், மற்றொரு பிரபல விருதான கோல்டன் குளோப் விருதை ஐந்து முறை வென்றுள்ளார்.
தூக்கு கயிற்றில் தொலைந்த துயரம்:
திரையில் தோன்றி ரசிகர்களை மகிழ்விக்கும் கலைஞர்களின் பலரின் திரைமறைவு வாழ்க்கை துயரப் பக்கங்களைக் கொண்டதாகவே வரலாற்றில் இருந்துள்ளது. இந்த வரலாற்று விதிக்கு ராபின் வில்லியம்ஸின் வாழ்வும் விதிவிலக்கல்ல என்பதே கசப்பான நிதர்சனம்.
இளமைக்காலத்தில் போதைப் பழக்கத்துக்கு அடிமையான ராபின் வில்லியம்ஸ், அப்பழக்கத்திலிருந்து மீளமுடியாமல் தனது இறுதி காலத்தைத் தவிப்புடன் கழித்தார். திரையின் மூலம் கோடிக்கணக்கானவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு சேர்த்த ராபின் வில்லியம்ஸ், தனது 63ஆவது வயதில் தனது வீட்டில் உள்ள படுக்கையறையில் தூக்குக் கயிற்றின் மூலம் சோக முடிவைத் தேடிக்கொண்டர்.
இவரின் முடிவுக்கு அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா தொடங்கி கமல் வரை அதிர்ச்சியை வெளிப்படுத்தி தங்களின் ஆதங்கத்தைப் பதிவு செய்தனர்.
யாரும் எதிர்பாராத வண்ணம் சோகம் தோய்ந்த முடிவை ராபின் எடுத்தாலும், அவரின் சிரிப்பு பொங்கும் முகமானது இன்றும் திரையை விட்டு நீங்காமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துகொண்டுதான் இருக்கிறது.