திரைக் கலைஞர்களின் உயர்ந்த அங்கீகாரமாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இரண்டு வாரங்களில் தொடங்க உள்ளது. எந்த திரைப்படத்துக்கு எந்தெந்த பிரிவுகளில் விருதுகள், எந்த கலைஞருக்கு என்ன அங்கீகாரம் என்பதை தாண்டி, நடிகர் நடிகைகளின் ஆடை அணிவகுப்பு, விருதுகள் வழங்குவதில் சர்ச்சை, ராம்ப் வாக், ஸ்டைல் ஸிம்பல் (style symbol) என பல காரணங்களாலும் ஆஸ்கர் விருதுகள் கவனம் பெறுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு ரெவனன்டு (revanant) படத்துக்காக சிறந்த நடிகர் விருது லியனார்டோ டி காப்ரியோவுக்கு அளித்தபோது, காலம் தாழ்த்தியமையால் நடுவிரல் தெரிவது போல் விருது பிடித்து காட்டியது, 2017 ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் தேர்வான 'சேல்ஸ்மேன்' திரைப்படத்தின் இயக்குனர் அஸ்கார் பர்ஹதி விருது வாங்க வராதது, 2018-ம் சிறந்த திரைப்பட பிரிவுக்கு தேர்வான படத்தின் பெயரை மேடையில் மாற்றிக்கூறியது என பல்வேறு சர்ச்சைகளை கடந்தே ஆஸ்கர் விருது விழா வந்திருக்கிறது.
இந்நிலையில் இந்த ஆண்டும் வழக்கம் போல் கலக்கலாக தொடங்கியுள்ளது ஆஸ்கர் ஜுரம். ஏற்கனவே விருதுகளுக்கான போட்டியாளர்களை அறிவித்திருந்த நிலையில் வரும் பிப்ரவரி 25-ம் தேதி 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்த விருது விழாவின் பின்னணி குறித்து தெரிந்து கொள்வோம்.
1927-ம் ஆண்டு எம்.ஜி.எம். ஸ்டுடியோவின் தலைவர் லூயிஸ் பி. மேயர் 36 உறுப்பினர்களை சேர்த்து லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அம்பாசிடார் ஹோட்டலில் அகாடமி ஆப் மோசன் பிக்சர்ஸ் ஆர்ட் அண்ட் சயின்ஸை(AMPAS-ACADEMY OF MOTION PICTURES ARTS AND SCIENCE) ஆரம்பித்தார். இந்த அமைப்பானது சினிமாத் துறையின் நன்மைகாக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவை உருவாக்கும் முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டது. பின் 1929-ம் ஆண்டு திரைகலைஞர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் அங்கீகரிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட விருதுதான் இந்த ஆஸ்கர். கடந்த 1929 ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் ரூஸ்வெல்ட் ஹோட்டலின் ப்ளாசம் அரங்கத்தில் 270 பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொண்டதுதான் முதல் ஆஸ்கர்.
இப்படி சிறு கூட்டத்தோடு ஆரம்பிக்கப்பட்ட ஆஸ்கர் விருது விழா, 91 ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சியடைந்தது. இன்று ஆஸ்கர் நிகழ்ச்சியின் இடைவேளையின் போது ஒளிபரப்பப்படும் 30 நொடி விளம்பரத்தின் மதிப்பு மட்டும் ரூ.18.5 கோடி. முதல் ஆஸ்கர் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் யார் என்று தெரியாத போதும், முதல் ஆஸ்கர் விருதை பெற்றவர் என்ற பெருமை எமில் ஜானிங்ஸையே சாரும். ஜெர்மன் நாட்டவரான இவர் ஐரோப்பியாவுக்கு செல்ல இருந்ததால் சீக்கிரமே விருதை தர சொல்லி அவர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டது அன்றைய அகாடமி அமைப்பு. அதனால் எமில் ஜானிங்ஸையே முதல் ஆஸ்கரை பெற்றுக்கொண்டார்.
22 பிரிவுகளில் திரைக்கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி சிறப்பு பிரிவுகளில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களையும், திரைப்படங்களையும் ஆஸ்கர் விருதுக்குழு தேர்ந்தேடுத்து அறிவிக்கும். அப்படி அறிவிக்கப்பட்ட திரைப்படங்களை ஆம்பா (AMPAS) உறுப்பினர்கள் பார்க்க கால அவகாசமும் அளிக்கும். பின் உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் வெற்றியாளரை விருதுக்குழு தேர்ந்தேடுக்கும்.
வாக்கு எண்ணிக்கை மறைமுகமாக நடைபெறுவதாலும் வாக்குகளை யார் அளித்தார் என்று அறிவிக்காமல் இருப்பதாலும் விருது வழங்குவதில் நம்பகத்தன்மை இல்லை என்றும் சர்ச்சை நீடித்து வருகிறது.
2018-ம் ஆண்டின்படி 8000 ஆம்பா (AMPAS) உறுப்பினர்கள் ஆஸ்கர் விருதுகளுக்கு வாக்களித்துள்ளனர். இந்த ஆண்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் எந்த திரைப்படங்கள் மோதுகின்றன, தொழில்நுட்ப கலைஞர்கள், திரைமொழியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் என விரிவான ஆய்வுகளை இனி வரும் பகுதிகளில் காணலாம்.