தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 நேற்றுடன் (ஜனவரி 18) நிறைவடைந்தது. இந்த போட்டி கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், 106 நாள்கள் ஒளிபரப்பானது. சீசன் 4இல் ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம், கேப்ரில்லா, அர்ச்சனா, சுசித்ரா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ஆஜீத் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். வாரம்தோறும் ஒருவர் வெளியேற்றப்பட, இறுதி யுத்ததில் ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தனர். அதில் சோம் சேகர் முதலில் வெளியேறினார். அதன் பின், ரம்யா பாண்டியன், ரியோ வெளியேறினர். அதனால் இறுதியில் பாலாஜி, ஆரி இருவர் மட்டுமே இருந்தனர். இதில், யார் வெற்றியாளர் என்பதை பார்ப்பதற்கு மக்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
இருவரையும் பிக்பாஸ் மேடைக்கு அழைத்து வந்த நடிகர் கமல்ஹாசன், வெற்றியாளராக ஆரியை அறிவித்தார். ஆரிக்கு மொத்தமாக 16 கோடியே 50 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. இரண்டாம் இடம் பிடித்த பாலாஜிக்கு 6 கோடியே 16 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. எனவே, பல கோடி வாக்குகள் வித்தியாசத்தில், பிக்பாஸ் கோப்பையை தட்டிச்சென்ற ஆரிக்கு, பிக்பாஸ் கோப்பையுடன் 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அட்வைஸ் ஆரி என சக போட்டியாளர்கள் கூறிவந்த நிலையில், எதை பற்றியும் கவலைகொள்ளாமல், தனது பாதையில் பயணித்து வின்னர் ஆரியாக வளம் வரத்தொடங்கியுள்ளார். ஆரியின் வெற்றியை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.