வாஷிங்டன்: சிறந்த படம் என்ற ஆஸ்கர் விருதை பெறப்போகும் போட்டியில் 344 படங்கள் இணைந்துள்ளன.
திரைத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகளை அமெரிக்காவிலுள்ள அகாதெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், சிறந்த திரைக் கலைஞர்களுக்கு வழங்கிவருகிறது.
92ஆவது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி 2020 பிப்ரவரி 9ஆம் தேதி லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள டால்பி திரையரங்கில் நடைபெறவுள்ளது.
பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் அளிக்கப்படும் நிலையில், முக்கியப் பிரிவாக கருதப்படும் ஆண்டின் சிறந்த படம் என்ற விருதைப் பெறப்போகும் போட்டியில் இடம்பெறும் படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், தி ஐரிஷ்மேன், ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட், ஜோக்கர், கேப்டன் மார்வெல் உள்ளிட்ட பல படங்கள் சிறந்த படத்துக்கான விருதை பெறும் பிரிவில் இடம்பிடித்துள்ளன.
2019ஆம் ஆண்டின் இறுதிக்குள் திரையரங்கில் வெளியாகி குறைந்தது ஏழு நாள்கள் ஓடியிருக்கும் படங்கள் இப்பிரிவில் போட்டியிட தகுதியான படங்கள் என்ற வரைமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறைந்தது 40 நிமிடங்களுக்கு மேல் படத்தின் நீளம் இருக்க வேண்டும் எனவும், 35 எம்.எம். அல்லது 70 எம்.எம். திரையரங்குகளில் திரையிடுவதற்கு ஏற்றபடி தயாரான படமாக இருக்க வேண்டும் எனவும் விதிமுறை உள்ளது.
இதன் அடிப்படையில் 344 திரைப்படங்கள் தற்போது சிறந்த படத்திற்கான விருதைப் பெறப்போகும் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன.
இவற்றிலிருந்து விருது பரிந்துரைக்கு தேர்வு செய்யப்படும் படங்களில் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட்டும் எனத் தெரிகிறது. பரிந்துரை பட்டியலில் போட்டிபோடும் படங்களிலிருந்து ஒரு படம் ஆஸ்கர் விருதை தட்டிச் செல்லும்.
இதையும் படிங்க: ஆஸ்கார் சென்ற முதல் நைஜீரிய திரைப்படம் புறக்கணிப்பு - பின்னணி என்ன?