தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (ஆகஸ்ட் 18) விசாரித்தது. காணொலி காட்சி மூலமாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தடை தொடரும். வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்" என்று கூறி உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை மதுமிதா தனது ட்விட்டர் பக்கத்தில், "மண்ணை மலடாகாமல்... காற்றை கழிவாக்காமல் காக்க உயிர்நீத்த வீரர்களுக்கு கிடைத்த வெற்றி இது. நெஞ்சில் தோட்டாக்களை ஏந்திய அவர்களின் ஆன்மா மகிழும் நாள். வழக்கை வெற்றிகரமாக நடத்தியவர்களுக்கு நன்றி. நீதிக்கு உயிர்கொடுத்த தீர்ப்பு இது" என்று பதிவிட்டுள்ளார்.