சர்க்ள் பாக்ஸ் என்டெர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் ஜான்சன் கே இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ’ஏ1’. சந்தானம், தாரா அலிசா பெர்ரி, யதின் கர்யேகர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

ஊரிலேயே அனைவராலும் போற்றப்படும் நல்லவர் மற்றும் சமூக சேவகரான ராமநாதனின் (யதின் கர்யேகர்) ஒரே மகள் திவ்யா(தாரா அலீஷா பெர்ரி). ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் அழகியான இவருக்கு தளபதி ரஜினிகாந்த் போன்ற நபரைத் திருமணம் செய்யவேண்டும் என்று ஆசை. ஆனால், அவர் ஐயங்கார் பையனாக இருக்க வேண்டும், மற்றொன்று அவர் செம ரவுடிஸம் செய்யும் ஆளாகவும் இருக்க வேண்டும் என்ற கண்டிஷன்களோடு காதலனைத் தேடுகிறார். அந்த வேளையில் நெற்றியில் நாமம், ரவுடிஸம் என அட்ராசிட்டி காட்டுகிறார் சரவணன் (எ) சரோ.

சரவணனை சந்தித்துக் கொண்ட சில வினாடிகளில் லிப் லாக் கிஸ், பாடல் என ஜெட் வேகத்தில் போகும் காதல் , அடுத்த நாளே அவர் லோக்கல் எனத் தெரியவர அந்த காதல், மோதலில் பயணித்து பிரேக்கப் ஆகிறது. அப்போதும் விடாமல் சரோ பின் தொடர என் அப்பா மிகவும் நல்லவர், அவர் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார். எனவே அவர் கெட்டவர் என்று ஏதாவது ஒரு இடத்தில் காட்டுங்கள் அப்போது உங்களை ஏற்றுக்கொள்கிறேன் என கதாநாயகி சொல்ல அந்த சவாலை கதாநாயகன் செய்து முடித்தாரா காதலியை கரம் பிடித்தாரா என்பது மீதிக் கதை.
சந்தானம் கடந்த இரண்டு படங்களாகவே தனது கிராஃப் என்ன என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு நடித்து வருகிறார். இந்தப் படத்திலும் டைமிங் நக்கல், காமெடி பன்ச் எனப் படம் முழுக்க திரையரங்கில் சிரிப்பொலி அடங்கியபாடில்லை. மொழி காரணமா என்று தெரியவில்லை சில இடங்களில் தாரா அலிஷா பெர்ரி நடிப்பில் தடுமாறியிருக்கிறார்.

காதாநாயகியின் தந்தையாக வரும் யதின் கர்யேகர் வேறு யாருமல்ல 'வசூல் ராஜா MBBS' சப்ஜெக்ட் ஆனந்த், மேலும் 'ஹேராம்' குரேஷியாக முன்பே அறியப்பட்டவர்தான். இந்தப்படத்தில் நல்லவராக , எளிமையானவராக இருந்து கிளைமேக்ஸில் ட்விஸ்ட் அடிப்பதெல்லாம் கலகலப்பு. படம் நினைத்துப் பார்ப்பதற்குள் முடிந்துவிடுவதால் எம்.எஸ்.பாஸ்கர், மீரா கிருஷ்ணன், ஸ்வாமிநாதன், லொள்ளு சபா மனோகர் என அத்தனைக் கேரக்டர்களும் அவரவர் வேலையை டக்கென முடித்துச் சட்டெனப் பறக்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு காமெடி படம். எடுத்துக்கொண்ட கதைக்குள் பெரிய ட்விஸ்ட், மெனக்கெடல் என போரடிக்காமல் பார்த்துப் பழகிய காதல் கதையை காமெடி கலந்து போகிறபோக்கில் தமிழிசை, லட்சுமி ராமகிருஷ்ணன் என காமெடியாக கலாய்த்துள்ளார் இயக்குநர் ஜான்சன் கே. பாடல் காட்சிகளிலும் , சண்டைக் காட்சிகளிலும் கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு அருமை. சந்தோஷ் நாராயணன் படத்திற்குத் தேவையான இசையை கொடுத்துள்ளார். பின்னணி இசை, காமெடி கலாட்டாவிற்கு கச்சிதமான பொருத்தம். அதிலும் மாலை நேர மல்லிப்பூ பாடல் வித்தியாசமாக மணக்கிறது.
சட்டென ஆரம்பித்து பட்டென முடியும் காமெடி சரவெடி படம். நிஜமாகவே சிரிக்கும் தருணங்கள் படத்தில் நிறையவே இருக்கின்றன. ஆனால் ”அக்யூஸ்ட் நம்பர் 1” பெயருக்கான தீவிரம் சந்தானம் கேரக்டரில் இல்லை என்றாலும் சிரிக்க வைத்த காரணத்தால் இந்த வார வருகையில் ”ஏ1” ஆக நிற்கிறது 'ஏ1:அக்யூஸ்ட் நம்பர் 1'.