2008ஆம் ஆண்டு மார்டின் மெக்டோனாக் இயக்கத்தில் கோலின் ஃபரெல், பிரெண்டான் க்ளீஸன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘In Bruges' (இன் ப்ரூஜ்ஸ்).
ரேய் எனும் கதாபாத்திரத்தில் கோலின் ஃபரெலும், கென் டேலி எனும் கதாபாத்திரத்தில் பிரெண்டான் க்ளீஸனும் நடித்திருந்தார்கள். ஒரே வயது பருவத்தை சேர்ந்தவர்கள் நட்பே பெரும்பாலும் சினிமாக்களில் நட்புக்கான இலக்கணமாக காட்டப்படுகிறது. அதிலிருந்து சில படங்கள் மட்டுமே வேறுபட்டிருக்கும். அதற்கு ஒரு உதாரணம்தான் ‘இன் ப்ரூஜ்ஸ்’.
காசுக்காக கொலை செய்யும் கும்பலில் ரேய் எனும் இளைஞனும், கென் என்ற 50 வயது மதிக்கத்தவரும் பணிபுரிகிறார்கள். இந்த கும்பலுக்கு ஒரு கொள்கை உண்டு, சிறுவர்களையோ குழந்தைகளையோ எக்காரணம் கொண்டும் கொலை செய்யக் கூடாது. ஒருவேளை கொன்றுவிட்டால், கொலை செய்தவன் தலைவனால் கொல்லப்படுவான்.
இந்த சூழலில், ரேய் ஒருவரை கொலை செய்யப்போன இடத்தில் ஒரு சிறுவனை தெரியாமல் கொன்றுவிடுறான். ரேய் செய்த தவறுக்கு அவனை கொல்லச் சொல்லி, அவனுடன் பணிபுரியும் கென்னுக்கு உத்தரவிடுகிறான் அந்த கூட்டத்தின் தலைவன். கென் தன் கூட்டாளியை கொலை செய்தானா இல்லையா என்பதுதான் மீதி கதை.
கூட்டாளியை கொல்ல முடியாமல் கென் கதாபாத்திரம் தவிக்கிறது. ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனை கொல்லச் செல்லும்போது, ரேய் கதாபாத்திரம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை பார்க்கிறான். ரேயின் தற்கொலை முயற்சியை தடுத்து விடுகிறார் கென். இருவருக்குள்ளும் விவாதம், சிறுவனை கொலை செய்ததை நினைத்து ரேய் வருந்துகிறான். இதைப் பார்த்த கென் அவனை கொல்லும் முயற்சியை கைவிடுகிறான். ரேய்க்கு வாழ உதவுவதாக தெரிவிக்கிறான்.
இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் இடையேயான நட்பு மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். ரேய்க்கு பிடித்தது கென்னுக்கு பிடிக்காது, கென் வயதுக்கேற்ற சிந்தனை ரேய்க்கு கிடையாது. இப்படிப்பட்ட இரண்டு கதாபாத்திரங்கள்தான் படம் முழுக்க பயணிக்கும். என்ன சண்டை வந்தாலும், ரேயை சாவில் இருந்து காப்பாற்றுவதையே கென் முக்கியமானதாக கருதிக் கொண்டிருப்பார். அதற்காக இறுதியில் தன் உயிரையும் கொடுப்பார்.
காசுக்காக கொலை செய்யும் கும்பல்களை பகடி செய்து எடுக்கப்பட்ட படம் ‘இன் ப்ரூஜ்ஸ்’. கதை சீரியஸாக தெரிந்தாலும், படம் நெடுக நீங்கள் சிரித்துக்கொண்டே இருக்கலாம். நண்பர்கள் தினத்தன்று ஒரு மாறுதலுக்காக இந்த படத்தை பாருங்கள், ரேய் - கென் கதாபாத்திரத்தின் நட்பு உங்களை நிச்சயமாக ஈர்க்கும்.
இதையும் படிங்க: HBDTaapsee கதை தேர்விலும் நடிப்பிலும் வெளுத்து வாங்கும் வெள்ளாவி தேவதை!