யோகி பாபு நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆர்.ஏ. விஜய் முருகன் இயக்கும் புதிய படம் 'காக்டெய்ல்'. பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்தும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
யோகிபாபுவுடன் சாயாஜி ஷிண்டே, மைம் கோபி, சுவாமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கரோனா ஊரடங்கு காரணமாக ஒரு சில திரைப்படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன.
ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்', கீர்த்தி சுரேஷ் நடித்த 'பெண்குயின்' உள்ளிட்ட திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின. அந்த வரிசையில் தற்போது 'காக்டெய்ல்' படமும் இடம் பெறுகிறது. திருமணமான 4 நபர்கள் காட்டுக்குள் சுற்றுலா சென்று அமானுஷ்ய சக்தியிடம் மாட்டிக் கொண்டு அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது திரைக்கதை.
திரையரங்கு வெளியீட்டிற்காக தயாரிக்கப்பட்ட இந்த படம், தற்போது ஊரடங்கு காரணமாக ஜூலை 10ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.