இது தொடர்பாக இயக்குநர் தங்கர்பச்சன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
சமூக வலைத்தளங்கள் ஏற்கனவே பாதி பேரை அடிமையாக மாற்றி வைத்திருந்தன. போதாக்குறைக்கு இந்த "கரோனா" இருப்பவர்களையும் அவ்வாறு மாற்றாமல் போகாது போலிருக்கிறது.
மூன்று வாரங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலையால் மக்களின் மனநிலை நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதை கவனிக்கிறேன். எவை எவற்றை வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம் என சிந்திக்கும் நிலையை பலர் இழந்து விட்டதை காணமுடிகிறது.
ஏற்கனவே இந்த யூடியூப் வரவால் பல திடீர் மருத்துவர்கள் உருவாகியிருந்தார்கள். இப்போது அப்படிப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே யூடியூப் எங்கும் நிரம்பிக் கிடக்கிறார்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் உண்மையா பொய்யா எனக் கண்டறிய யாருமில்லை. ஒரு வேளை அதை அறிந்தாலும் மக்களுக்கு எடுத்துரைப்பாரும் எவருமில்லை.
இதைப்பார்த்து, "எதையாவது அரைத்துத்தின்று எல்லாமும் கெட்டு நிற்பதை விட கரோனா வந்து விட்டுப் போகட்டுமே" என எனது உறவினர் ஒருவர் உள்ளம் உடைந்து போய் சொல்கிறார்.
சமூக வலைத்தளங்களிலிருந்து தப்பித்து தொலைக்காட்சிக்குப் போனால், மீதி இருக்கிற உயிரும் சீக்கிரத்தில் போய்விடும் போலிருக்கிறது. அந்த அளவுக்கு கரோனா செய்திகள் பீதியை கிளப்புகின்றன.
இந்த நிலையில் அரசுக்கு வருமானத்தை தந்த டாஸ்மாக் அடிமைகள் வீட்டுக்கொருவராவது இருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாளைக்கு அவர்களால் தாக்குப்பிடிக்க முடியும் என்பதும் தெரியவில்லை.
இவைகள் இப்படியென்றால் வாட்ஸ்-ஆப் கொடுமை பெரும் கொடுமையாக இருக்கிறது. தனக்கு எது வந்தாலும் அதை உடனே பிறருக்கு தள்ளிவிட்டு உட்கார்ந்து விடும் போக்கினால் பொய்ச் செய்திகள் மட்டுமே உலாவிக் கொண்டிருக்கின்றன. அந்தச் செய்திகளில் உண்மைத்தன்மை இருக்கிறதா? இல்லையா? என்பதை ஆராயாமல் பிறருக்குப் பகிர்வதை தயவுகூர்ந்து இனிமேலாவது கட்டுப்படுத்திக் கொள்வோம்.
மனித இனம் தோன்றி கணக்கற்ற நோய்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உருவாகி, மனித உயிர்களை அழித்திருக்கின்றன. வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது என அரசு கூறும் வழிமுறைகளையும், மருத்துவர்களின் பரிந்துரைகளையும் கடைபிடிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை.
எது எப்படி இருந்தாலும் கரோனா மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கிவிட்டு செல்லப் போகிறது. மனித மனம், உடல், பிற உயிர்கள், இயற்கை என அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
நல்லதே நடக்கும் எனும் நம்பிக்கையில் எதிர்காலத்தை எதிர்கொள்வோம். அது மட்டுமே இப்போது நம் கையில் இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழில் அறிவிப்பு செய்வது சலுகை இல்லை; உரிமை - தங்கர் பச்சான்