ஹாலிவுட்டில் சூப்பர்மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன், தோர், அயர்ன்மேன் என பல ஆண் சூப்பர் ஹீரோக்களுக்கு மத்தியில் ஒரு பெண் சூப்பர் ஹீரோவை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு வெளியாகி, பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ’வொண்டர் வுமன்’.
2017ஆம் ஆண்டு கேல் கடோட் நடிப்பில் ரிலீஸான வொண்டர் வுமன் திரைப்படத்தின் முதல் பாகம், வர்த்தக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண் சூப்பர் ஹீரோக்களின் வரிசையில் வெளியாகி ஹிட்டான முதல் திரைப்படம் இதுவாகும்.
இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ’வொண்டர் வுமன் 1984' என்ற பெயரில் உருவாகி, ரிலீஸுக்கு தயாராவுள்ளது. வருகிற அக்டோபர் 2ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்திரைடத்தின் ரிலீஸ் தேதி தற்போது மீண்டும் தள்ளிப்போயுள்ளது.
அதன்படி 'வொண்டர் வுமன் 1984’ இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பரவல் காரணமாக பெரும்பாலான நாடுகளில் இன்னும் திரையரங்குகள் முழுமையாக திறக்கப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் 'வொண்டர் வுமன் 1984’ திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின், கரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 14, அக்டோபர் 2 என்று இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் உங்களை மகிழ்விக்க வருகிறார் எல்லன் டிஜெனெரஸ்