மதுரை மாவட்டம் அண்ணா பேருந்து நிலையம் அருகே 52 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வந்தவர் ராமு தாத்தா.
1967ஆம் ஆண்டு அண்ணா பேருந்து நிலையத்தில் தொடங்கிய உணவகத்தில் 1.50 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கத் தொடங்கினார்.
அதையடுத்து 1980ஆம் ஆண்டிலிருந்து 3 ரூபாய்க்கு வழங்கினார். அவ்வாறு அவர் சாப்பாடின் விலையை 5 ரூபாய்க்கு உயர்த்த, இறுதியாக விலைவாசி கருதி பத்து ரூபாய்க்கு உணவு வழங்கி வந்தார்.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரின் மறைவு குறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”மதுரை ராமு தாத்தா! உங்கள் உடல் மரிக்கலாம்; நீங்கள் போட்ட உணவு செரிக்கலாம்.
ஆனால் உங்கள் நினைவு பசியாறியவர் நெஞ்சில் நீங்காமல் நிலைக்கும்! (17 வயதில் வடலூர் வள்ளலாரால் ஈர்க்கப்பட்டு இவ்வாறு வாழ்ந்திருக்கிறார்) தன் தொழிலை சேவையாக மாற்றும் அனைவரும் தெய்வங்களே. வீரமும் ஈரமும் நிரம்பிய மண் அல்லவா மதுரை” என்று பதிவிட்டுள்ளார்.