அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் பிகில். இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்றது.
இதில் பல்வேறு திரை நட்சத்திரங்களும் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசிய கருத்துகளுக்கு சிலர் விமர்சனங்கள் எழுப்பினர். இந்தச் சூழலில் புதியதாக மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது.
அது என்னவென்றால், விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விவேக், நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் 1960ஆம் ஆண்டு வெளியான 'இரும்புத்திரை' படத்தின் இடம்பெற்றிருந்த 'நெஞ்சில் குடியிருக்கும்' பாடல் குறித்து பேசினார். இந்நிலையில், சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் விவேக்கின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், சிவாஜி படத்தில் இடம்பெற்றிருந்த பாடலை விவேக் கிண்டலடித்திருக்கிறார். மேடை கிடைத்துவிட்டால், சிலர் உளற ஆரம்பித்துவிடுகின்றனர். ஒரு நடிகரை காக்காய் பிடிப்பதற்காக பாடலை கிண்டலடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், நடிகர் விவேக் முன்னதாக பராசக்தி படத்தில் இடம்பெற்றிருந்த வசனத்தை கிண்டலடித்திருந்தார். தற்போது சிவாஜியின் பாடலையும் கிண்டலடித்துள்ளார். இனியும் அவ்வாறு செய்தால் அவருக்கு எதிராக போரட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர்.