80, 90களில் ஆக்ஷன் ஹீரோயின் எனப் பெயர் எடுத்தவர், நடிகை விஜயசாந்தி. இயக்குநர் பாரதிராஜா இயக்கிய 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்தார்.
இவர் நடித்த ஆக்ஷன் படங்கள், ஹீரோக்களின் ஆக்ஷன் படங்களுக்கு இணையாகப் பேசப்பட்டன. இதனால் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்றும் இவர் அழைக்கப்பட்டார்.
ரஜினிகாந்துடன் இவர் நடித்த 'மன்னன்' திரைப்படம் ரசிகர்களால் ரசிக்கக்கூடிய படமாக இருந்து வருகிறது. இந்த படத்திற்கு பின் இவர் நடித்த, ஒரு சில படங்கள் சரியாக ஓடவில்லை.
இதனால் அரசியலில் கால் பதித்தார். 2009 நாடாளுமன்ற தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆனார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
இந்நிலையில், விஜயசாந்தி மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், முன்னணி நடிகர் மகேஷ்பாபு நடிக்க உள்ள படம் ஒன்றில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜயசாந்தி ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த படத்தின் மூலம் திரையுலகிற்கு விஜயசாந்தி ரீ-என்ட்ரி கொடுக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.