விஜயராஜ் என்னும் இளைஞராக பெரும் திரை கனவுகளுடன் சென்னைக்கு வந்த விஜயகாந்தின் முதல் படம் அகல் விளக்கு. இறுதியாக திரையில் தோன்றிய விருதகிரி. சட்டம் ஒரு இருட்டறை விஜயகாந்தின் முதல் ஹிட் திரைப்படம்.
எம்ஜிஆரின் உணர்ச்சிவயப்படச் செய்யும் குடும்பப் பாடலான நாளை நமதே பாடலுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அமைந்த சிறந்த குடும்பப் பாடல்களில் ஒன்று ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது;’ எனும் பாடல் இப்படத்தில் இடம்பெற்றது. இப்படத்தில் நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.
இப்படத்தின் இயக்குநர் நடிகர் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். எஸ்ஏசியின் இயக்கத்தில் இதுவரை 17 படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார்.
’புரட்சிக் கலைஞர்’ என பின்னாள்களில் விஜயகாந்த் கொண்டாடப்பட வித்திட்ட மேலும் சில புரட்சிப் படங்கள் சிவப்பு மல்லி, அலையோசை, நீதி பிழைத்தது, நீதியின் மறுபக்கம் ஆகிய படங்கள். இப்படங்களில் இடம்பெற்ற ’எரிமலை எப்படி பொறுக்கும்’, ’போராடடா, ஒரு வாளேந்தடா’ பாடல்கள் இன்றைய இணைய உலகிலும் ஹிட் அடித்து நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
கமர்ஷியல் படங்களையும் மற்றொருபுறம் தந்து சிறந்த என்டெர்டெய்னராக வலம் வந்த விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, ஊமை விழிகள், நினைவே ஒரு சங்கீதம், செந்தூரப் பூவே உள்ளிட்ட படங்கள் இன்றளவும் ரிப்பீட் ஆடியன்ஸ்களால் கொண்டாடப்பட்டு பார்க்கப்படுபவை.
ரஜினி - கமல் எனும் 80களின் பெரும் நடிகர்களுக்கு மத்தியில் அனைத்து தரப்பு ஆடியன்ஸ்களையும் கவர்ந்து திரையில் கோலோச்சியவர் விஜயகாந்த். இவரது 100ஆவது படமான கேப்டன் பிரபாகரன் தொடங்கி கேப்டன் எனும் அடைமொழியோடு பரவலாக அறியப்பட்டார்.
பல முன்னணி நடிகைகளுடன் விஜயகாந்த் நடித்திருந்தாலும், விஜயகாந்த் - ராதிகா ஜோடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ராதிகாவுடன் நானே ராஜா நானே மந்திரி, நீதியின் மறுபக்கம், தெற்கத்திக் கள்ளன் உள்ளிட்ட படங்களும், அவற்றின் பாடல்களும் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன
யார் தன்னைப் பார்க்க வந்தாலும் அவர்களை சாப்பிட வைக்காமல் திருப்பி அனுப்பமாட்டார் எனும் நல்மதிப்பைப் பெற்றவர் எம்ஜிஆர். அவரைத் தொடர்ந்து அந்த குணநலனை சுவீகரித்துக் கொண்டவர் விஜயகாந்த்.
ஸ்டைல், திரைவாழ்வு ஆகியவற்றின் காரணமாக எம்ஜிஆரின் திரை வாரிசாக பல நடிகர்களும் தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டாலும், கறுப்பு எம்ஜிஆர் என திரை உலகிற்கு உள்ளேயும், வெளியேயும் பலராலும் வாஞ்சையுடன் அழைக்கப்பட்டு கொண்டாடப்பட்டவர் விஜயகாந்த்.
பிறருக்கு உதவும் செயல்களிலும் தொடர்ந்து எம்ஜிஆரோடு ஒப்பிடப்பட்டு புகழப்பட்ட விஜயகாந்த், தனது பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடி வருகிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் மகன் போன்ற பிணைப்பைக் கொண்டிருந்த விஜயகாந்த், அவரது புரட்சி வசனங்களைப் பேசி படத்தில் நடித்ததோடு, அவரது தலைமையில் திருமணமும் செய்துகொண்டார். 1996ஆம் ஆண்டு திரை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்த கருணாநிதிக்கு பொன் விழாவின்போது அவரது புரட்சி வசனங்களுக்கு பரிசாக தங்கப் பேனாவை வழங்கி கௌரவித்தார்.
.
பெரும் தமிழ்ப் பற்றும், ஈழத் தமிழ் மக்கள் மீதும் பேரன்பும் கொண்ட விஜயகாந்த், தான் அரசியல் வாழ்வில் நுழைவதற்கு முன்பிருந்தே தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவுக் குரல் எழுப்பு வருகிறார். விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது கொண்ட காதலால் தன் மகனுக்கு பிரபாகன் எனப் பெயர் சூட்டியவர் தன் நூறாவது படத்துக்கும் கேப்டன் பிரபாகரன் எனப் பெயர் சூட்டினார்..