இந்தி பட ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் அஜித்துடன் சேர்ந்து வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
பிங்க் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் அதனை அப்படியே இயக்காமல் படத்தில் சிறு மாற்றங்கள் செய்து இயக்குவதாக வினோத் தெரிவித்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், அவ்வப்போது 'நேர்கொண்ட பார்வை' படத்தின் அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது புதிய மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராக அறிமுகமாகி நடிகர் இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர் பா.விஜய். தற்போது, 'நேர்கொண்ட பார்வை' படத்தில் மூன்று பாடல்களை எழுத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிப்பு, இயக்கம் என பிசியாக இருந்த பா.விஜய் ஆறு வருடங்கள் கழித்து அஜித் நடிக்கும் படத்திற்கு பாடல்கள் எழுதுகிறார்.
கடந்த 2013-ம் ஆண்டில் வெளிவந்த ஆரம்பம் படத்தில் யுவனின் இசையில் பா.விஜய் பாடல் எழுதியது குறிப்பிடத்தக்கது.