இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமாக உருவாகும் 800 என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் பலரும் கண்டனங்களும், எதிர்ப்பும் தெரிவித்துவருகின்றனர். சிங்கள அரசுக்கும், ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை ஏற்க முடியாது எனப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், பாடலாசிரியர் தாமரை விஜய் சேதுபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "முரளிதரன் வெறும் கிரிக்கெட் வீரர், சாதனையாளர் என்றால் அதில் நீங்கள் நடிப்பதை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர் இலங்கையிலிருந்து இலங்கை அணிக்காக விளையாடி வந்தது கூட, தமிழர்களால் நடுநிலையாகவே பார்க்கப்பட்டு வந்தது. ஆரம்ப காலத்தில் அது விமர்சனத்துக்குள்ளான போது, புலிகள் கோலோச்சிய காலத்தில், தேசியத்தலைவர் ''அவர் விளையாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்க வேண்டாம், நம் பிள்ளை ஒருவர் விளையாடுகிறார் என்றே கொள்வோம்" என்று பெருந்தன்மையோடு கூறியதால் சர்ச்சை முற்றுப் பெற்று முரளிதரன் தொடர்ந்து விளையாட முடிந்தது.
அன்று தலைவர் நினைத்திருந்தால், அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும். முரளிதரன் சிங்களவர்க்கிடையே ஒற்றைத் தமிழராக இருந்தது கூட பெரும் நெருக்கடியாக இருந்திருக்கலாம். தன் வாழ்விருப்பிற்காக அவர் சிங்களராகவே மாறியிருந்ததைக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், அவர் அந்த இடத்தில் நிற்கவில்லையே ஐயகோ!
எட்டப்பன் ஒரேயொரு குட்டிவேலைதான் செய்தான், இன்றளவும் 'எட்டப்பன்' என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது என்று தெரியுமல்லவா ?. உங்கள் பெயர் அப்படியொன்றாக மாறிவிடக் கூடாது என்பதில் உங்கள் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட எங்களுக்கு பதைபதைப்பு இருக்காதா?
நாமென்ன போர்முனையில் துப்பாக்கி தூக்கிக் கொண்டு ரத்தமும் குண்டு சிதறலுமாக அலைந்தோமா? போராட்டங்களில் முன்வரிசையில் நின்று மண்டையடி வாங்கினோமா ? அண்ணனைக் காணோம் அக்காவைக் காணோம் அம்மாவை சாகக் கொடுத்தோம் என்று பைத்தியமாக தெருக்களில் அலைந்தோமா?
இசைப்பிரியாக்களின் ஒரு துண்டுத் துணியாகவாவது இருந்திருப்போமா ? இல்லை அங்கு காயம் பட்டுக் கதறிய எம்குலக் குழந்தைகளுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தோமா? தமிழன் தாழ்ந்திருக்கும் காலம் இது! காலக்கோளாறு இது! தமிழன் தாழலாம் ஆனால் வீழக்கூடாது. வீழ்த்த முனைபவர்கள் பல வேடமிட்டு வரத்தான் செய்வார்கள், ஏமாந்து விடக்கூடாது.
நம் கையை எடுத்து நம் கண்ணையே குத்துவார்கள், தூங்கிவிடக் கூடாது. முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில்! அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக்கூடாது! மக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள். என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம் ! உலகத்தமிழர் நம் பக்கம் இருக்கிறார்கள்.
பின் குறிப்பு: சிறந்த நடிப்புக் கலைஞரான உங்களுடைய தோற்றப் பொருத்தம் இன்னொருவருக்கானது !. அதை ஏற்று நடியுங்கள், வரலாறு உங்களை என்னவாக எழுதுகிறது என்று பார்ப்போம் ! தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை படமாகும் நாள் தொலைவிலில்லை ! படம் வெளியிட்டிருக்கிறேன், கண்ணாடி முன்நின்று ஆயத்தப் படுத்திக் கொள்ளுங்கள்" என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: #ShameOnVijaySethupathi - வெளியான முத்தையா மோஷன் போஸ்டரால் சர்ச்சை