நடிகர் விஜய்சேதுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கினார். அப்போது மறைந்த நடிகர் கிரேஸி மோகன் பேசிய வசனம் ஒன்றை அந்த மேடையில் பேசியிருந்தார்.
அந்த வசனத்தை சிலர் எடிட் செய்து, இந்துகளுக்கு எதிராக விஜய்சேதுபதி பேசியது போல் மாற்றி இணையத்தில் பரப்பி உள்ளனர். இதனால் சமூக வலைதளங்களில் இந்து மத ஆதரவாளர்கள் சிலர் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றி தவறாகவும், அவதூறாகவும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த வீடியோ விஜய்சேதுபதியின் நற்பெயரைக் கெடுக்கும் வண்ணம் உள்ளதால், அந்த எடிட் செய்த வீடியோவை இணையத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விஜய்சேதுபதி ரசிகர்கள், கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
இதேபோல் நேற்று, அந்த வீடியோவை நீக்க வேண்டும் என்று விஜய்சேதுபதி ரசிகர்கள் மற்றும் நற்பணி இயக்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவல் ஆணையரிடம் புகார் கொடுத்த விஜய் சேதுபதி ரசிகர்கள்!