சென்னை: 'கோடியில் ஒருவன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (செப். 9) நடைபெற்றது. இந்த விழாவில், விஜய் ஆண்டனி, ஆத்மிகா, தயாரிப்பாளர்கள் டி.சிவா, தனஞ்செயன், இசையமைப்பாளர் நிவாஸ்.கே. பிரசன்னா, இயக்குநர்கள் ரமணா, விஜய் மில்டன், சிஎஸ். அமுதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் தனஞ்செயன் பேசும்போது, இத்திரைப்படம் பிரமாண்டமாக வந்துள்ளது. நான் முதலமைச்சர் ஆகட்டுமா என்று விஜய் ஆண்டனி என்னிடம் கேட்டார். இப்படம் அதுமாதிரியான படம். இப்படத்தில் படத்தொகுப்பாளராகவும் விஜய் ஆண்டனி அறிமுகமாகியுள்ளார். சமூகத்திற்கு தேவையான கருத்து இப்படத்தில் உள்ளது என்றார்.
சம்பளத்தைக் குறைத்துக்கொண்டார்
இதனையடுத்து விஜய் ஆண்டனிக்கு நன்றி தெரிவித்த நிவாஸ்.கே. பிரசன்னா, நல்ல படக்குழுவுடன் வேலை செய்ததில் மகிழ்ச்சி எனவும் பாடல்கள் நன்றாக வந்துள்ளது எனவும் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, கரோனா காலத்தில் தயாரிப்பாளர்களின் நிலையை புரிந்துகொண்டு சம்பளத்தை குறைத்துக்கொண்டவர் விஜய் ஆண்டனி என தயாரிப்பாளர் டி.சிவா புகழாரம் சூட்டினார்.
இவர்களைத் தொடர்ந்து படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி பேசுகையில்,"படம் நன்றாக வந்துள்ளது. மெட்ரோ பார்த்துவிட்டு இயக்குநர் ஆனந்திற்கு போன் செய்து வாழ்த்தினேன். அவருடன் படம் பண்ணுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. லோகேஷ் கனகராஜ், அட்லி வரிசையில் இவரும் இணைவார்.
விஜய் ஆண்டனி - விசித்திர பிறவி
படத்தை எடுப்பதைவிட வெளியிடுவதுதான் கடினம். தயாரிப்பாளர் சங்கத்திற்கு சம்பளம் வாங்காமல் படம் நடிக்க ஆசை உள்ளது. வருங்காலத்தில் படம் நடிப்பேன். நல்ல படங்களை அனைவரும் ஆதரியுங்கள். மற்ற படங்களை வெச்சு செய்யலாம்" என்றார்.
அதன்பின்னர் பேசிய திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன்," இத்திரைப்படத்திற்கு கண்ணகி நகர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியது மறக்க முடியாத அனுபவம். வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த மனிதர் விஜய் ஆண்டனி, அவர் ஒரு விசித்திர பிறவி.
இப்படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் உள்ளன. அனைத்தும் அருமையாக வந்துள்ளன. இப்படம் ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. சாதியை கொண்டாடும் மக்களால் உயர்வு அடைய முடியாது. சமூகநீதியை உணர்த்தும் படமாக இது இருக்கும். பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதியன்று இப்படம் வெளியாவதில் மகிழ்ச்சி" என்றார்.
இதையும் படிங்க: தலைவர் திருவிழா ஆரம்பம் - குஷியில் ரஜினி ரசிகர்கள்