சென்னை: அறிமுக இயக்குநர் பாண்டியன் - சிபிராஜ் கூட்டணியில் புதிய திரைப்படமொன்று உருவாகிவருகிறது. இத்திரைப்படம் சிபிராஜின் 20ஆவது திரைப்படமாகும். மொழி, எல்லைகளைக் கடந்து உலகளாவிய ரசிகர்களை ஈர்க்கும் வகையிலான கதைக்கருவுடன் இப்படம் உருவாகிறது.
இத்திரைப்படம் முதல் பாதியில் குடும்ப உணர்வுகளைப் பேசும்படியும், இரண்டாவது பாதியில் கதாநாயகனுக்கும் எதிரிக்கும் இடையே நடக்கும் ஆடு - புலி ஆட்டத்தை ஆக்ஷன் அதிரடி திரில்லர் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இது குறித்து ஹர்ஷவர்தன் பேசுகையில், “நான் கடந்த ஐந்தாண்டுகளாக தென்னிந்திய இசைத் துறையில் பணியாற்றிவருகிறேன். வித்யாசாகர், ஏ.ஆர். ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ், தமன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுக்கு கீ-போர்டு புரோகிராமராக இருந்திருக்கிறேன். இது எனது முதல் படம் என்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.
இப்படத்தின் திரைக்கதையைக் கேட்டபோது, பின்னணி இசைக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தேன். அது இப்படத்தை ஒரு சிறந்த படைப்பாகக் கொண்டுவர வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தியது. இப்படம் முழுக்க, முழுக்க ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம்.
முன்பே ஆக்ஷன் திரைப்படங்களில் பணிபுரிந்தபோதும், பிற இசையமைப்பாளர்களின் கீழ்தான் பணிபுரிந்துள்ளேன். இப்போதுதான் முதல்முறையாக இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. படத்தில் ஒன்றிரண்டு பாடல்கள் உள்ளன. விரைவில் அதற்கான ரெக்கார்டிங் பணிகள் தொடங்கவுள்ளன” என்றார்.
இதையும் படிங்க: விக்ரமின் 'கோப்ரா' படப்பிடிப்பு நிறைவு!