பாலு மகேந்திராவின் அசிஸ்டென்டாக பணியாற்றிய வெற்றிமாறன், 'பொல்லாதவன்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 'ஆடுகளம்' படத்தின் மூலமாக தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றார். 'ஆடுகளம்' படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பாலு மகேந்திரா அமைதியாக இருந்தபோது, என்ன சார் எதுவும் சொல்லமாட்றீங்க' என வெற்றிமாறன் கேட்டிருக்கிறார். அதற்கு பாலு மகேந்திரா, 'என்னடா இப்படி படம் எடுத்துவச்சுருக்க, நல்ல நடுவர் குழுவா இருந்தா 6 தேசிய விருது கிடைக்கும்னு' சொல்லியிருக்கிறார்.
அதையடுத்து 2011ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் அறிவிப்பு:
சிறந்த இயக்குநர் - வெற்றிமாறன்
சிறந்த நடிகர் - தனுஷ்
சிறந்த திரைக்கதை - வெற்றிமாறன்
சிறந்த எடிட்டிங் - கிஷோர்
சிறந்த நடன அமைப்பாளர் - தினேஷ் குமார்
நடுவர் குழு வழங்கும் சிறப்பு விருது - வி.ஐ.எஸ். ஜெயபாலன்
அவர் சொன்னது போலவே 6 தேசிய விருதை பெற்றது 'ஆடுகளம்'.
வெற்றிமாறன் திரைப்படங்கள் பெரும்பாலும் மனித மனங்களின் குரூரத்தை பேசக்கூடியதாகவும், அதிகார வர்க்கத்திற்கு எதிராக கேள்வி எழுப்புவதாகவும் இருக்கின்றன.
பொல்லாதவன்
'பொல்லாதவன்' திரைப்படத்தில் தனுஷுக்கும் வில்லனுக்கும் இடையேயான சின்ன ஈகோ பிரச்னை, வில்லன் தன்னுடைய அண்ணனை கொலை செய்யும் அளவு, அவனை தூண்டியிருப்பதை தெளிவாக வெற்றிமாறன் காட்சிப்படுத்தியிருப்பார்.
ஆடுகளம்
சேவல் சண்டையை மையமாக வைத்து வெளியான 'ஆடுகளம்' திரைப்படமும் இதேபோலதான், சேவல் சண்டையில் தன்னைவிட பெரிய ஆள் யாருமில்லை என்று எண்ணியிருக்கும் பேட்டைக்காரனின் பிம்பம் கருப்பு என்ற இளைஞனால் உடையும். இதனால் பேட்டைக்காரனை சார்ந்திருப்பவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை காட்சிப்படுத்தியிருப்பார், வெற்றி.
மேலும் பேட்டைக்காரன் தன்னுடைய மனைவியுடன் கருப்பு கதாபாத்திரத்தை தொடர்புப்படுத்தி பேசுவதும், பேட்டைக்காரனால் தன்னுடைய தாயை இழந்து, வாழ்க்கையை இழந்து தவிக்கும் கருப்பு கதாபாத்திரம், க்ளைமேக்ஸில் உன்ன அப்பா மாதிரி நினைச்சிருந்தேன்யானு கருப்பு தனுஷ் உருகும்போது, குற்றவுணர்ச்சியில் பேட்டைக்காரன் கழுத்தறுத்து தற்கொலை செய்துகொள்வது என முழுக்க முழுக்க மனித மனங்களைப் பிரதிபலிக்கும் காட்சிகளை அடுக்கியிருப்பார் வெற்றிமாறன். இடைவெளியில் சேவல் சண்டையின் பரபரப்புடன் ஆரவாரமாக காணப்பட்ட திரையரங்கம், இந்த இறுதிக் காட்சியின் முடிவில் மயான அமைதியாக இருந்தது. இந்தக் காட்சி பார்வையாளர்கள் மனதில் அப்படி ஒரு கனத்தைக் கொடுத்திருக்கும்.
விசாரணை
எம். சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ நாவலை தழுவி வெற்றிமாறன் இயக்கிய மூன்றாவது திரைப்படம் ‘விசாரணை’. இந்தத் திரைப்படம் அதிகார வர்க்கத்தின் கோர முகத்தை அப்பட்டமாக காட்டியிருக்கும். மனித உரிமைக்கு ஆதரவான திரைப்படம் என பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, ஆஸ்கர் விருது வரை பரிந்துரைக்கப்பட்ட இத்திரைப்படத்துக்கும் 3 தேசிய விருதுகள் கிடைத்தது.
இந்த மூன்று படங்களுக்குப் பிறகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெற்றிமாறன் என்ற பெயர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தத் தொடங்கியது. இந்த சூழலில்தான் ‘வட சென்னை’ படத்தின் அறிவிப்பு வெளியானது. தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கிஷோர் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கினார்கள். இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருந்தது.
’திருப்பி அடிக்கலைனா நம்மள அட்ச்சு ஓடவிட்னே இருப்பானுங்க’
‘வடசென்னை’ படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தமிழ் சினிமாவின் பெருவாரியான ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடத் தொடங்கினர். கேங்ஸ்டர் ஜேனரில் உருவான இப்படத்தில் பல கத்திகள் உலாவினாலும் ஷார்ப்பாக இருந்தது அதிகாரவர்க்கத்தை குத்திக் கிழிக்கும் வெற்றிமாறனின் வசனங்களே...
’திருப்பி அடிக்கலைனா நம்மள அட்ச்சு ஓடவிட்னே இருப்பானுங்க .. குடிசையோ குப்பமேடோ.. இது நம்ம ஊரு, நம்மதான் இத பார்த்துக்கனும், நம்மதான் இதுக்காக சண்ட செய்யனும்னு’ ‘வடசென்னை’-யின் முதல் பகுதியை முடித்திருப்பார், வெற்றி. எனினும் ‘வடசென்னை’ மக்களிடம் இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த மக்களின் மனநிலையை உணர்ந்து, அவர்கள் கேட்டுக்கொண்ட காட்சிகளை படத்தைவிட்டு நீக்க சம்மதித்தார், இயக்குநர்.
முதல் மூன்று படத்தில் ஜி.வி. பிரகாஷ்குமாரை இசையமைப்பாளராக பயன்படுத்தியிருந்த வெற்றிமாறன், ‘வடசென்னை’ படத்துக்கு சந்தோஷ் நாராயணனை பயன்படுத்தியிருப்பார். அதற்கு நியாயம் செய்யும் விதமாக சந்தோஷ் நாராயணனும் மிரட்டலான இசையை கொடுத்திருப்பார். வடசென்னை திரைப்படம் அதன் திரைக்கதை, இசை, எடிட்டிங் என அனைத்துக்கும் பெரிதாக பாராட்டுகளைப் பெற்றன.
வெற்றிமாறன் தன்னுடைய படத்தை உருவாக்க மெனக்கெடுவது, அவர் படங்களின் காட்சிகளிலேயே தெரியும். சின்ன சின்ன டீட்டெய்லிங்கில் கூட தெளிவாக கொடுத்திருப்பார். ‘ஆடுகளம்’ படம் வெளியானபோது சென்னையைச் சேர்ந்த ஒருவர் எப்படி இவ்வளவு தத்ரூபமாக, மதுரை மண் சார்ந்த படத்தை எடுக்க முடிந்தது எனப் பலரும் ஆச்சரியப்பட்டனர். மதுரை ஸ்லாங்கை அத்தனை அப்பட்டமாக, அதுவரை எந்த தமிழ் சினிமாவிலும் பேசியதில்லை. அதற்குக் காரணம் அந்தப் படத்தில் பணிபுரிந்த மதுரை பகுதியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாறனின் வசனமே..! அதற்கும் உரிய இடம் கொடுத்தவர் வெற்றி மாறன்.
வீட்டுக்கு புள்ளையா போய்ச் சேரு போ
கோட்டிங்க கொடுத்துட்டு திரியிறீயா ... இப்படி பல வசனங்களை சொல்லலாம். மதுரைச் சார்ந்த படம் என பேசப்பட்ட பல திரைப்படங்களிலும், வெறுமனே இழுத்துப் பேசுவதையே மதுரையின் பேச்சு வழக்காக சித்தரித்திருப்பார்கள். ஆனால், வெற்றிமாறன் தன்னுடைய படத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர். அதேபோல் ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் உண்மையான சேவல் வளர்ப்புக் கலை வல்லுநர் வீரமணியைப் பயன்படுத்தியிருப்பார். அந்த மண் சார்ந்த மக்களையே பெரும்பாலும் அந்தப் படத்தில் பயன்படுத்துவார், இது அவரது கலை மீதான தாகத்தை வெளிப்படுத்துகிறது .
வெற்றிமாறன் தனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதில் தெளிவாக இருப்பவர். ஒரு இயக்குநர் தன்னுடைய படைப்புக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு மேடையிலும் வலியுறுத்தி வருகிறார். ‘ஆடுகளம்’ படத்தில் சில போர்ஷன்களை விக்ரம் சுகுமாறன் இயக்கினார் என பொது மேடையிலேயே சொல்லியிருப்பார். மற்றவர்களின் கதையைத் திருடி படம் எடுக்கும் இந்தக் காலகட்டத்தில், வெற்றிமாறன் போன்றவர்கள் திரைத்துறையின் மேல் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.
‘வடசென்னை’ படத்துக்கு சர்ச்சை எழுந்தபோது, நான் டைட்டில் கார்டிலேயே ’இது வடசென்னையில் வாழும் ஒரு குழுவைப் பற்றிய திரைப்படம்’ என குறிப்பிட்டிருந்தேன். இதை நான் புத்திசாலித்தனமாக செய்ததாக சொல்கிறார்கள். அதை நான் புத்திசாலித்தனமா செய்யல, நேர்மையா செஞ்சேன். அந்த குறிப்பிட்ட சமுதாய மக்களின் மனதை சில காட்சிகள் புண்படுத்துவதாக சொல்லவும், அந்தக் காட்சியை நான் உடனே நீக்கிவிட்டேன்’ என கூறியிருப்பார்.
தமிழ் சினிமாவின் பொக்கிஷ இயக்குநரான வெற்றிமாறனுக்கு இன்று பிறந்தநாள், அவருடைய திரைப்பயணத்தின் அடுத்த படைப்பான ’அசுரன்’ சர்வதேச அளவில் தமிழ் சினிமாவை தலைநிமிரச்செய்யும் என்பதில் ஐயமில்லை. அசுர இயக்குநர் வெற்றிமாறனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்...
#HBDVetrimaaran #HappyBirthdayVetrimaaran