பாலிவுட்டில் டாப் நடிகராக வலம்வருபவர் வருண் தவான். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள, ’கூலி நம்பர் 1’ திரைப்படம் தற்போது ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இதையடுத்து இயக்குநர் ராஜ் மேத்தா இயக்கும் படத்தில் வருண் தவான் நடித்துவந்தார்.
அதற்கிடையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அரசு அறிவுறுத்தியுள்ளதுபோல் படக்குழு கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனை முடிவில் வருண் தவான், இயக்குநர் ராஜ் மேத்தா ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் வீட்டில் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக்கொண்டனர். தொடர்ந்து வருணின் ரசிகர்கள் பலரும் விரைவில் வருண் தவான் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து வருண் தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பெருந்தொற்றுக்குப் பிறகு படப்பிடிப்புக்குச் சென்றபோது கோவிட்-19 பரிசோதனை செய்தனர். அப்போது தொற்று நோய் இருப்பது தெரியவந்தது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும், கரோனா ஏற்பட்டுள்ளது. வாழ்க்கையில் எதுவும் உறுதியாகச் சொல்லமுடியாது. குறிப்பாக கோவிட் -19.
எனவே தயவுசெய்து அனைவரும் கூடுதல் கவனமாக இருங்கள். நான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும். பலரும் என் மீது அன்பாக இருப்பதை சமூக வலைதளங்கள் மூலம் காண முடிந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.