சென்னை: தமிழ் சினிமாவின் நகைச்சுவை சக்ரவர்த்தியாக வலம் வந்தவர் வைகைப் புயல் வடிவேலு. இம்சை அரசன் 23ம் புலிகேசி மூலம் நாயகனாக அதகளம் செய்தார். அதனை தொடர்ந்து சில படங்களில் நாயகனாக அரிதாரம் பூசினார். எனினும், அவை நினைத்து அளவு வெற்றிபெறவில்லை.
இந்நிலையில், இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் பாதியில் நின்றது. சம்பள பிரச்னை தயாரிப்பாளர் சங்கம் வரை சென்றது. வடிவேலுவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கும் சமாதானம் ஏற்பட்டதை அடுத்து வடிவேலு மீதிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக இயக்குநர் சுராஜை சந்தித்து வடிவேலு டிஸ்கஷனில் ஈடுபட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:சினிமாவை காப்பாற்றுவது சிறிய படங்கள்தான் - இயக்குநர் பேரரசு!