சென்னை: சமூகப் பாகுபாடு பற்றி கூறும் கதையம்சத்துடன் தனது இரண்டாவது படத்தை இயக்கவுள்ளார் நடிகர் போஸ் வெங்கட்.
கிராமத்து கிரிக்கெட்டை மையமாக வைத்து, அதன் பாகுபாடுகளைத் தனது அடுத்த படத்தில் எடுத்துரைக்கிறார் போஸ் வெங்கட். இந்தப் படத்தில் உறியடி, உறியடி இரண்டு படங்களை இயக்கி நடித்த விஜய் குமார் பிரதான கேரக்டரில் நடிக்கவுள்ளார். இதர கதாபாத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
வரும் ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் படத்தைப் படமாக்கவுள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் துணை நடிகராகப் பல படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றிய போஸ் வெங்கட், கன்னி மாடம் என்ற படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். கடந்த மாதம் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதுடன் விமர்சக ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது.
சாதியம், ஆணவக் கொலை பற்றி கன்னி மாடம் படத்தில் அழுத்தமாகப் பேசியிருந்தார் போஸ் வெங்கட். இதைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் சமூகப் பகுபாட்டை கையிலெடுத்துள்ளார்.