கரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த இயக்குநர் தாமிரா சிகிச்சைப் பலனின்றி இன்று (ஏப்ரல் 27) உயிரிழந்தார். இவரின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் தாமிராவின் நண்பரும், பத்திரிகையாளருமான டி.வி. சோமு அவரின் நினைவு குறித்துப் பகிர்ந்துள்ளார்.
அதில், “இருபது ஆண்டுகளுக்கு முன், குங்குமம் இதழில் நான் பணிபுரிந்தபோது, அங்கு உடன் பணியாற்றிய வி.கே. சுந்தர் அவர்களைச் சந்திக்க வருவார், தாமிரா. இருவரும் நெருங்கிய நண்பர்கள். அப்படியே எங்களுக்குள்ளும் நட்பு பூத்தது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்திக்கும் வாய்ப்பு அருகியது. முகநூல் வந்த பிறகு அடிக்கடி அலைபேசுவோம். நெகிழவைக்கும் அவரது பதிவுகளைப் படித்து அலைபேசுவேன். எனது சில பதிவுகள் நெகிழவைத்ததாக அவரும் அலைபேசுவார்.
பேச்சு இதில் ஆரம்பித்தாலும் எங்கெங்கோ செல்லும். சில மாதங்கள் முன்பு, வடபழனி அருகே ஒரு விடுதி அறையில் தங்கியிருந்தார். திரைக்கதை எழுத அப்போது நேரில் பார்த்ததுதான். எழுத்து, திரைப்படம் எதிலும் மனிதமே பிரதானமாய் இருந்தது. நிஜத்திலும்கூட அப்படியே இருந்தவர் அவர்.
ஒருமுறை இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது , என்னைக் கவர்ந்த சிறுகதை ஒன்றைச் சொன்னேன். பல ஆண்டுகளுக்கு முன் படித்தாலும் அப்படியே மனத்தில் படிந்த கதை அது.
ஒரு சிறுவன். அவன் அம்மா, கோழி, குஞ்சு பொறிக்க அடைவைத்திருப்பார். கூடையால் மூடி வைத்திருப்பார். அந்தக் கூடையை அவ்வப்போது திறந்துப் பார்த்து, கோழியையும், குஞ்சுகளையும் ரசிப்பது சிறுவனின் வழக்கம்.
இடையில் திடுமென அவனது அப்பா இறந்துவிடுகிறார். எல்லோரும் அழவே, அவனும் அழுகிறான். உறவினர்கள், “ஏண்டா நீ அழுவுறே… அப்பா திரும்பி வருவார்..” என்று சொல்ல, உற்சாகமாய் விளையாட ஆரம்பிக்கிறான்.
சில நாள்கள் கடக்கின்றன. “அப்பாதான் வருவாரே” என்கிற எண்ணத்தில் வழக்கமாக மகிழ்வாகவே பொழுது போகிறது அவனுக்கு. கோழி அடைகாக்கும் கூடையை சற்றே தூக்கிப் பார்த்து வழக்கம்போல் பார்க்கிறான். கூடையை மீண்டும் வைக்கும்போது அதில் சிக்கி ஒரு குஞ்சு இறந்துவிடுகிறது. இதைப் பார்த்த அம்மா, “இப்படி செத்துப்போக வச்சிட்டியேடா” என அவனை அடிக்கிறாள்.
வலித்தாலும் இவன் அழவில்லை.
முறைத்தபடி, “செத்தா என்ன… திரும்பி வரும்ல..” என்கிறான் கோபத்துடன். அம்மா, “செத்ததது எப்படிடா திரும்பி வரும்?” என்கிறாள்.
அவன் அலறி அழ ஆரம்பிக்கிறான்: “அப்பா…!” மனத்தில் நின்ற கதைகளுள் ஒன்று. ஆனால் எழுதியது யாரென தெரியாமல் இருந்தேன். தேடிக்கொண்டே இருந்தேன். இதை தாமிராவிடம் சொன்னதும்… என்னை சில விநாடி பார்த்தவர், “நான் தான் எழுதினேன்!” என்றார் அதே மென்பேச்சில்.
ஆம்… அப்போதுதான் எனக்கு, கனவில் மட்டுமே கண்டுகளித்த – மெய்சிலிர்த்த அடர்வன அருவி ஒன்றை திடுமென நேரில் தரிக்க வாய்ப்பு கிடைத்தது.
தாமிராவின் ஆண்தேவதை திரைப்படமும் அற்புத படைப்பு. பிரிய நினைக்கும் தம்பதி இப்படத்தைப் பார்த்தால் அந்த முடிவை கைவிடுவர். தாமிராவின் கட்டுரைகள், கதைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி வசனங்கள்… நிறைய சொல்லலாம். எல்லாவற்றிலும் எல்லோரின் மீதான பேரன்பே அடிநாதமாய் இருக்கும்!
ஷேக் தாவூதாய் பிறந்த அவர், தன் மண்ணின் மீது - குறிப்பாக தன், ( தாமிரபரணி) ஆற்றின் மீதான பேரன்பின் காரணமாக, தாமிரா ஆனார். ஆம்.. தன் மத அடையளம் துறந்து மண் மணத்தையே சூடிக்கொண்டார்.
அன்பு தாமிரா, உங்களுக்குத் தெரியாததா…
நினைவுகளில் வாழ்வதுதானே மனித இனம்.
எங்கள் நினைவில் என்றும் வாழ்வீர்கள்” எனக் கூறியுள்ளார்.