இயக்குநரும், நடிருமான டி.ராஜேந்தர் அடுக்கு மொழி வசனங்களால் ரசிகர்களை கவர்ந்தவர். 80களில் இவர் இயக்கிய அனைத்து படங்களும் மக்களின் மனதை வென்றது. இந்நிலையில், அவரது இளைய மகனும் சிம்புவின் தம்பியான குறளரசனுக்கு இம்மாதம் திருமணம் நடக்க இருக்கிறது.
சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான 'இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் குறளரசன். இதுதவிர, வேறு எந்த படத்திற்கும் இசையமைக்கவில்லை. மேலும், ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில், தான் காதலித்து வந்த இஸ்லாமிய பெண்ணை குறளரசன் திருமணம் செய்ய இருக்கிறார்.
அந்தப் பெண்ணிற்காக பிப்ரவரி 14ஆம் தேதி தனது தந்தை டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். ஆனால், குறளரசன் என்ற பெயரை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. மணப்பெண்ணின் பெயர் நபீலா ஆர்.அகமத் ஆகும். இவர்களுக்கான திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
டி.ராஜேந்தர் தனது மூத்த மகன் சிம்புவின் திருமணம் கேள்விக்குறியாக இருக்கும்பட்சத்தில், இளையமகன் திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், டி.ராஜேந்தர் இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து குறளரசன் திருமணத்தின் அழைப்பிதழை வழங்கினார். இந்த நிகழ்வின் போது குறளரசனும் உடனிருந்தார்.
மேலும், குறளரசனின் திருமண வரவேற்பு ஏப்ரல் 29ஆம் தேதி கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறுகிறது.