சென்னை: ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கொள்ளை அடிப்பதாகக் கூறிய நடிகர் பிரசன்னாவின் கருத்துக்கு, மின் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாக்களில் கதாநாயகன், வில்லன் என பல வேடங்களில் நடித்து வரும் நடிகர் பிரசன்னாவுக்கு பதில் அளிக்கும் விதமாக மின் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்துக்கு உள்ளடக்கிய தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு கணக்கெடுக்கப்பட்டு மின் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தற்போது நிலவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மின் நுகர்வோர் மற்றும் ஊழியரின் பாதுகாப்பு காரணம் கருதி மின் கணக்கெடுப்பு எடுக்க முடியாத நிலையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மின் கணக்கீடு செய்யப்படாமல் முந்தைய மாதம் மின்நுகர்வோர் செலுத்திய தொகையை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு வசூல் செய்யப்படும் தொகை அடுத்து வரும் மாத கணக்கெடுப்பு தொகையில் சரி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டு மின் நுகர்வு அதிகரித்ததால் மின் கணக்கெடுப்பு நடத்தும்போது அதிக கட்டணம் வரும் நிலையில், மின் வாரியம் முந்தைய கட்டணத்தை மட்டுமே கழித்து, யூனிட்டை கழிப்பதில்லை என்று ஊடகங்களில் வரும் செய்தி தவறானதாகும்.
மேலும் நடிகர் பிரசன்னா மின்வாரியம் ஊரடங்கு காலகட்டம் நிறைவடைந்த பின்பு மின் கணக்கெடுப்பு என்ற முறையில் கொள்ளை அடிப்பதாக தவறான செய்தியை வெளியிட்டுள்ளார்.
இந்த கணக்கெடுப்பு முறையானது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி நடைமுறைப்படுத்தப்படுவதால் நடிகர் பிரசன்னா தமிழ்நாடு மின்சார வாரியத்தை கடும் சொற்களால் குற்றஞ்சாட்டுவது கண்டிக்கத்தக்கதாகும்.
நடிகர் பிரசன்னா வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளன. மின் இணைப்பு எண்: 32 80 10 60 மற்றும் 32 80 10 61. இதில் மின் இணைப்பு எண்: 32 80 10 60-ஐ கணக்கீடு செய்ததில் ஜனவரி மாதம் யூனிட்கள் 2 ஆயிரத்து 280 மின் நுகர்வுக்கு 13 ஆயிரத்து 528 ரூபாயை செலுத்தியுள்ளார்.
மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிப்பால் கணக்கீடு செய்ய முடியாத நிலையில் முந்தைய மாத கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தக் கட்டணம் இதுவரை மின் வாரியத்துக்கு செலுத்தப்படவில்லை.
மேற்கண்ட மின் இணைப்பில் மே மாதம் 4 மாதங்களுக்கான மொத்த நுகர்வு 6 ஆயிரத்து 920 யூனிட்கள் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த யூனிட்டை மொத்தமாக கணக்கிட்டால் இதற்கான கட்டணம் 44 ஆயிரத்து 152 ரூபாய் ஆகும்.
ஆனால் செய்திக்குறிப்பில் கூறியுள்ளபடி 6 ஆயிரத்து 920 யூனிட்டானது, இரண்டு மாத மின் கணக்கெடுப்பு அடிப்படையில் தலா இரண்டு மாதங்களாக பிரிக்கப்பட்டு 3 ஆயிரத்து 460 யூனிட், வீத பட்டியலின்படி மின்கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது.
3 ஆயிரத்து 460 யூனிட்டுக்கான மின்கட்டணம் 21 ஆயிரத்து 316 ரூபாய் ஆகும். ஆக இரண்டு 3 ஆயிரத்து 460 யூனிட்டுகளுக்கான மின்கட்டணம் 42 ஆயிரத்து 632 ரூபாய் ஆகும். இவற்றின் முந்தைய மாத கட்டணம் 13 ஆயிரத்து 528 ரூபாய் கழிக்கப்பட்ட பின், 29 ஆயிரத்து 104 ரூபாய் மட்டுமே மே மாத கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆனால் நடிகர் பிரசன்னா முந்தைய மாத கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்ட 13 ஆயிரத்து 528 செலுத்தாத காரணத்தினால், அவர் மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை 42 ஆயிரத்து 632ஆக உள்ளது.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழக்கமான நடைமுறை கணக்கெடுப்பு முறையில்தான் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆகவே மின்சார வாரியத்தால் மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படும் பொழுது நான்கு மாத மின் நுகர்வு, தலா இரண்டு மாதம் மின் நுகர்வாக பிரிக்கப்பட்டு அதற்கான பட்டியலில் மின்கட்டணம் கணக்கிடப்பட்டு முந்தைய மாத கட்டணம் கழிக்கப்பட்ட பின் மின் கட்டண தொகை கணக்கிடப்படுகிறது.
இதை கருத்தில் கொள்ளாமல் முந்தைய மாத யூனிட்டை கழிக்காமல் தொகையை மட்டுமே கணிக்கப்படுகிறது என்ற செய்தி தவறானதாகும்.
பொதுமக்கள் தங்களின் கணக்கீட்டு முறையில் சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை அணுகி தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம் மற்றும் கணக்கீடு செய்யப்படும் முறை தமிழ்நாடு மின்சார வாரிய இணைய தளத்திலும் தெரிந்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.