தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலையால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் திறக்கப்பட்டன. அதுவும் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து வெளியான படங்களில் தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் லாபம் கொடுத்த படமாக விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் அமைந்தது. அதற்குபிறகு வெளியான சில படங்களுக்கு ரசிகர் கூட்டம் வரவில்லை. இதற்கு ஓடிடியும், கரோனா பரவலும் தான் காரணம் என பேசப்பட்டது. இருப்பினும் நல்ல படங்கள் வந்தால், மக்கள் நிச்சயம் திரையரங்குகளை நோக்கி வருவார்கள் என்று சிவகார்த்திகேயனுக்குத் தெரிந்திருக்கிறது.
அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் ரசித்தனர். படம் வெளியான அனைத்து பகுதிகளிலும், திரையரங்குகள் திருவிழா போல் காட்சியளித்தது. கடந்த இரண்டு வருடங்களாக வெறிச்சோடி காணப்பட்ட திரையரங்குகள் டாக்டர் படத்தால் ஹவுஸ்புல்லாக மாறியது.
இதனிடையே ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நாளை முதல் ஞாயிறுவரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அரண்மனை 3, ராஜவம்சம், தள்ளிப்போகாதே ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திரையரங்குகளில் டாக்டர் படம் ஓடிக்கொண்டு இருப்பதாலும், அரண்மனை 3 படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதால், ராஜவம்சம், தள்ளிப்போகாதே படங்கள் வெளியீட்டிலிருந்து தள்ளிப்போனது.
மேலும் 'அரண்மனை 3' படம் நாளை (அக்.13) வெளியாகவுள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவும் பல பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாட ஏற்ற படமாக இப்படம் இருப்பதால் மக்கள் பலரும் அரண்மனை 3 படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியில் ’அலா வைகுந்தபுரமுலோ’: படப்பிடிப்பு தொடக்கம்