இயக்குநர் கரு. பழனியப்பன் கதாநாயகனாக நடித்துள்ள 'கள்ளன்' படத்தை சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ளார். கதாநாயகியாகத் தோழா படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்த நிகிதா நடித்துள்ளார். இவர்களுடன் வேலா ராமமூர்த்தி, நமோ நாராயணன், செளந்தர்ராஜா, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், ரெஜின், பருத்திவீரன் முருகன், அருண், மாயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
எண்பதுகளின் இறுதிக் காலகட்டத்தில் நடக்கிற மாதிரியான காலகட்டத்தைக் கொண்ட இத்திரைப்படம் வரும் ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. அதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில் பல்வேறு சமுதாய அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தனிப்பட்ட முறையில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் ஆகிய மூவருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்திவருவதாகக் கூறப்படுகிறது.
ஆக்ஷன் கிரைம்
இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் இயக்குநர் சந்திரா தங்கராஜ் கூறுகையில், "இந்தக் கதைக்கு இப்படியொரு டைட்டில்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால்தான் வைத்தோம். இது எந்த சாதியையும் முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட படமல்ல.
இது ஒரு ஆக்ஷன் கிரைம் படம். வேட்டை சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருத்தன், இனிமேல் வேட்டையாடக்கூடாது என்று தடைபோட்ட பிறகு வறுமையின் காரணமாக வாழ்க்கையில் ஒரே ஒரு தவறு செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுகிறான்.
அறம்தான் ஜெயிக்கும்
அது அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடுகிறது. வாழ வழியில்லாமல் அவனும், அவனது நண்பர்களும் ஓடுகிற ஓட்டத்தில் கடைசியில் 'அறம்தான் ஜெயிக்கும்' என்பதைப் பரபரப்பாகச் சொல்லுகிற ஒரு கமர்ஷியல் படம். வேட்டை சமூகம் என்பது எல்லா ஊர்களிலும், நாடுகளிலும் இருக்கக் கூடியதுதான். நான் பார்த்த ஒரு வாழ்க்கையை நெருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.
வேட்டையாடும் காட்சிகள்
மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படமாக மட்டுமின்றி, நல்ல கருத்தை மக்களுக்குச் சொல்லும் ஒரு கமர்ஷியல் படமாக இருக்கும். அதே சமயம், படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மக்கள் மனத்தில் பெரிய இடம்பிடிப்பார்கள்.
குறிப்பாக படத்தில் வரும் இரண்டு பெண் கதாபாத்திரங்கள் பெரிதும் பேசப்படும். படத்தில் வேட்டையாடும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. அவற்றை கிராஃபிக்ஸ் மூலம் படமாக்கினோம். ஆனால், அது கிராஃபிக்ஸ் என்று தெரியாதவாறு மிக நேர்த்தியாக இருக்கும்.
நாங்கள் யாருடைய மிரட்டலுக்கும் பயந்து டைட்டிலை மாற்றும் எண்ணத்தில் இல்லை. நீதிமன்றமோ அல்லது தணிக்கைக் குழுவோ இந்த தலைப்பை மாற்றச் சொன்னால், நிச்சயம் வேறு ஒரு தலைப்பு வைக்கத் தயாராக இருக்கிறோம். மற்றபடி, வேறு யாருடைய மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டோம்" என்றார்.
இதையும் படிங்க: சமூகநீதிப் படங்கள் வணிக ரீதியாக வெற்றி - சத்யராஜ் பெருமிதம்