Ilayaraja Song Explanation: டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதையில் உருவாகிவரும் திரைப்படம் 'மாயோன்'. இத்திரைப்படத்தில் சிபி சத்யராஜ் நாயகனாகவும், தான்யா ரவிச்சந்திரன் நாயகியாகவும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் என் கிஷோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்த்துள்ளார்.
கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சனி, காயத்திரி ஆகியோரின் குரலில் வெளியான 'மாயோன்' பட பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. 'மாயோனே மணிவண்ணா...' என்ற இப்பாடலின் லிரிகல் வீடியோவும் பாடலுடன் வெளியானது. தற்போது இந்த லிரிகல் வீடியோவே இசை ஆர்வலர்களிடத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
லிரிகல் வீடியோவில் 'தஞ்சம் என்று நம்பி உந்தன் தாழ் பணிந்தோம்...' என்ற வரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வரிகளில் 'தாள் பணிந்தோம்' என்பதற்கு பதிலாக, 'தாழ் பணிந்தோம்' என இடம் பெற்றிருக்கிறது. 'தாள் பணிந்தோம்' எனும் சொல் 'இறைவனின் பாதம் பணிந்தோம்' எனும் நேரடியான பொருளை வழங்குகிறது.
'தாழ் பணிந்தோம்' எனும் சொல் 'தாழ்மையுடன் பணிந்தோம்' என்ற பொருளைத் தருகிறது. இதனையடுத்து இரண்டில் எவை பொருத்தமானது என இசை ஆர்வலர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.
தற்போது இது குறித்து படக்குழுவினர் விளக்கமொன்றை அளித்துள்ளனர். அதில், “கதைச்சூழலின் படி ‘தாள் பணிந்தோம்’, ‘தாழ் பணிந்தோம்’ என இரண்டுமே பொருத்தமானது தான். லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் ‘தாழ் பணிந்தோம்’ என்ற சொல்லும், இசை விமர்சகர்கள் உணர்த்தும் ‘தாள் பணிந்தோம்’ என்ற சொல்லும் புறநானூற்று இலக்கிய ஆதாரத்தின்படி இறைவனின் பாதம் பணிந்து வழிபடும் பொருளைத்தான் குறிப்பிடுகிறது.
இருந்தாலும் இசை விமர்சகர்கள் சுட்டிக் காட்டியதை ஏற்றுக்கொண்டு, லிரிக்கல் வீடியோவில் 'தாள் பணிந்தோம்' என மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது'' என குறிப்பிடப்பட்டுள்ளது. இசை ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் மறுபதிவேற்றம் செய்த படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இதையும் படிங்க: Sivakarthikeyan Gesture: 'டிரம்ஸ்மேனுக்காக சைகை காட்டிய சிவகார்த்திகேயன்'; நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!