இன்று நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாள். அவரின் திரைஆளுமை, ஸ்டைல், உடல்மொழி, வசனம் என அனைத்திற்கும் நாம் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது ஈர்க்கப்பட்டிருப்போம் என்பதே நிதர்சனம். ஆறில் இருந்து அறுபதுவரை இவரை ரசிக்காத மக்கள் கூட்டம் இருக்க வாய்ப்பே இல்லை.
பாலச்சந்தர் கண்ட ரஜினி
தமிழ் சினிமாவின் தன் முதல் இடத்தை இன்றளவும் தக்கவைத்துக் கொண்டு நிரந்தர நாற்காலியில் அமர்ந்திருப்பவர். எனினும் ,இவரை அறிமுகம் செய்த பாலச்சந்தர் தனது நட்புவட்டாரத்தில் பல முறை, “நான் தேடிக் கண்ட ரஜினி இது அல்ல, இதையும் தாண்டியது” என்று அடிக்கடி கூறியதாக பாலச்சந்தரின் நெருங்கிய வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அப்படி என்றால், பாலச்சந்தர் கண்ட ரஜினி யார்? இதற்கான பதிலாக 70களில், ரஜினி நடித்த பல திரைப்படங்கள் சான்றாய் இருக்கிறது. அதில், தமிழ் சினிமாவின் ஒரு முக்கியப் பதிவாய் திகழும் பாலச்சந்தர் இயக்கிய தப்புத்தாளங்கள் திரைப்படத்தை பற்றி காண்போம்.
தமிழின் முதல் பின்நவீனத்துவ சினிமா
1978இல் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் தான் ‘தப்புத்தாளங்கள்’. இது தமிழ் சினிமாவின் முதல் பின்நவீனத்துவ(Post mordernism) சினிமா என்றே கூறலாம். ஏனென்றால், இதில் சொல்லப்பட்ட திரைமொழி, அன்றைய காலத் தமிழ் சினிமாவில் யாரும் பயன்படுத்தாத புதிய அணுகுமுறையாக இருக்கும் .
காட்சிகளுக்கு நடுவே தலைப்பு பலகையில் நக்கல் வசனங்களை காட்டிய அணுகுமுறை இன்றளவும் பார்ப்பதற்கு புதுமையாகவே உள்ளது. அந்த காலகட்டத்தில் கலாச்சாரக் கட்டமைப்பை, தமிழ் சினிமாவில் இவ்வளவு கேள்வி எழுப்பியது மற்றும் இன்றி அதை கலைநயத்துடன் உருவாக்கியதுதான் இன்றளவும் கே.பாலச்சந்தரை ’இயக்குநர் இமயமாக’ வைத்திருக்கிறது.
இந்தப் படத்தில் கதை மாந்தர்கள் எவரும் கெட்டவர்கள் இல்லை, ஆனால் சமூகப்படி அவர்கள் கேவலமான பிழைப்பு நடத்துபவர்கள். கிராமத்தை காப்பாற்றும் சொக்கத்தங்க கதாநாயகர்களும், அவர்களை விரட்டிக் காதலிக்கும் கதாநாயகிகளும் உள்ளத் திரைபடங்கள் வெளிவந்த காலக்கட்டத்தில், இந்த திரைப்படத்தின் கதாநாயகன், ஒரு அடியாள் மற்றும் கதாநாயகி ஒரு பாலியல் தொழிலாளி.
காலம்கடந்தச் சிந்தனை
ஒரு அடியாளுக்கும், பாலியல் தொழிலாளியாக வாழும் பெண்ணிற்கும் ஏற்படும் காதலும், அவர்களின் நல்வாழ்வு மீட்பை நோக்கிய பயணமும், அந்த பயணத்தின் விடைதான் தப்புத்தாளங்கள். இப்படி ஒரு கதையை அந்த காலக்கட்டத்தில் கே.பாலச்சந்தரைத் தவிற வேறு யாரும் செய்திருக்க முடியாது.
இந்தத் திரைப்படத்தில் நாம் சிறுவயதில் கண்ட ஸ்டைல் செய்யும் ரஜினி இருக்க மாட்டார், வசனம் பேசமாட்டார், வாழ்வில் இறுதி வரைத் தோற்றுப்போவார், நமக்கு தெரிவதெல்லம் ‘தேவு’(ரஜினியின் கதாபத்திரத்தின் பெயர்) மட்டும் தான். அவ்வளவு எளிமையான, பெரிதும் அலட்டிக்கொள்ளாத நடிப்பு. பல பாவனைகள், உடல் மொழிகள் அவருக்கென்ற முத்திரை நடிப்பில் அளவு கூடாமல் இருக்கும்.
இன்றும் புதிதாய் திகழும் திரைமொழி
இப்படத்தின் ,’சரசு’ என்கிற கதாபாத்திரத்தில் வரும் சரிதாவின் நடிப்பும் அபாரமாக இருக்கும், காட்சிகளுக்கு நடுவிலோ அல்லது முடிவிலோ வரும் தலைப்பு பலகை வசனங்கள் கே.பியின் டச்..!.எடுத்துக்காட்டாக இடைவேளைக் காட்சி முடிவில் வரும் தலைப்புப் பலகையில், “ பத்தினியானாலே பெரும் கஷ்டம் தான்..,சத்திய சோதனைகள் ஏராளம்..!” என்ற வசனம் வரும்.
இப்படிப்பட்ட வசனத்தை இன்றைய திரைப்படத்தில் காணுவதே மிக அரிது. இதை 43 வருடங்களுக்கு முன் வைத்ததே அசாத்திய துணிச்சல் என்று தான் சொல்ல வேண்டும். இறுதியில் சரிதா ,”நீ எப்படி உள்ள வந்த?இங்க தான் ஆம்பளங்க பாலியல் தொழில் பண்ணா பிடிக்க மாட்டங்களே..?” என்று கேட்கும் வசனம் நிச்சயமாக கண்களை கண்ணீர் பற்றச் செய்யும்.
காட்சியமைப்பு, வசனம், திரைக்கதை என அனைத்திலும் கே.பி காலம் கடந்தே சிந்தித்திருக்கிறார் என்பதை இப்போதும் உணரலாம். இப்படைப்பின் தாக்கம், நிச்சயமாக இன்றைய பல சினிமாவில் இருக்கும்.
அதற்கு ஒரு சான்றாய் ராம் இயக்கிய ’தரமணி’ திரைப்படத்தை சொல்லலாம். மேலும், பல படைப்பாளிகளுக்குத் தப்புத்தாளங்கள் பெருந்தாக்கமாக இருக்கும் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை.
இப்படிப்பட்ட ரஜினியின் நடிப்பை பார்க்கும் போது, ஒரு மகாநடிகனை வெறும் கமர்சியல் கதாநாயகனாக மாற்றி விட்டது காலத்தின் கசப்பான விபத்து என்றே எண்ணத் தோன்றும்.
இதையும் படிங்க:சூப்பர் ஸ்டாருக்கு பிரதமர் மோடியின் வாழ்த்து!