சென்னை: மறைந்த முதலமைச்சரும், பழம்பெரும் நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி 'தலைவி' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடித்துள்ளனர்.
ஏன் சிக்கல்?
இத்திரைப்படம், வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெளியாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது.
அதாவது ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி நான்கு வாரம் கழித்துதான் ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர். ஆனால், தலைவி படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டாவது வாரத்திலேயே ஓடிடியில் வெளியிட படத் தயாரிப்பு நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
பேச்சுவார்த்தை வெற்றி
இந்நிலையில் இப்படத்தைத் தயாரித்த விப்ரி மோஷன் பிக்ஷர்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம், திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்பேச்சுவார்த்தையில் படம் வெளியாகி நான்கு வாரம் கழித்தே ஓடிடியில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு உறுதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
தலைவி திரைப்படம் திட்டமிட்டபடி வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படம் தமிழில் அமேசான் பிரைம் நிறுவனத்திற்கும், இந்தியில் நெட்பிளிக்ஸிற்கும் வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்ஸ்டாவில் 13 மில்லியன் ஃபாலோயர்கள் - விஜய் தேவரகொண்டா புதிய சாதனை