மறைந்த நடிகர் சுஷாந்த் தற்கொலை குறித்து கருத்துத் தெரிவித்து வந்த நடிகை கங்கனா ரணாவத், சமீபத்தில் மும்பை நகரத்தையும் மகாராஷ்டிரா மாநிலத்தையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து, மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கங்கனாவின் அலுவலகத்தில் பல பகுதிகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி மாநகராட்சி இடித்துத் தள்ளியது.
இதற்குப் பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், குஜராத் மாநிலம், சூரத்தில் நெசவுத் தொழிலாளர்கள் சிலர் ஒன்றிணைந்து புடவையில் கங்கனாவின் புகைப்படத்தை அச்சடித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அதில், ’I Support Kangana Ranaut’ என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து நெசவுத் தொழிலாளர்கள் கூறுகையில், "மகாராஷ்டிர அரசு, ஒரு பெண்ணுக்கு எதிராகப் போராடுவது தவறானது. அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது முற்றிலும் தவறான ஒன்று.
கங்கனாவுக்கு எங்கள் ஆதரவை எவ்வாறு தெரிவிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் புடவையின் அவரது புகைப்படத்தை அச்சடிக்கலாம் என்ற யோசனை வந்தது. இந்த யோசனை எங்களது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது" என்று கூறியுள்ளனர்.