சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், சங்கத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கினர். இந்தச் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி, செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மன்னன், சந்திரபிரகாஷ் ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அவர்கள் கூறுகையில், “தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை தொடங்க அனுமதி அளித்ததற்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றி. விரைவில் திரையரங்குகள் திறக்க அறிவிப்பு வரவுள்ளதால் தமிழ் திரையுலகின் எதிர்காலம் கருதி சங்க நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
படத்தின் டிக்கெட் கணிணிமயமாக்கம்
தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் வழங்கும் முறையை கணிணிமயமாக்க வேண்டும். இனிவரும் காலங்களில் படத்தின் தயாரிப்பாளர் அனுமதி பெற்றுதான் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும். சிறிய முதலீட்டு படங்களுக்கு முன்பு இருந்தது போல் மூன்று வகையான டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும். தயாரிப்பாளர்கள் விபிஎப் கட்டணம் செலுத்துவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.
அதன் பின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி, “சிறிய படங்களுக்கு திரையரங்கு கிடைக்கும் வகையில் டிக்கெட் வழிமுறைகளை கடைப்பிடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது வரை சிறிய படங்கள் உள்பட 250க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸுக்கு காத்துக்கொண்டு உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட சிறிய படத்தயாரிப்பாளர்களுக்கு சங்கத்தின் சார்பாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
படத்தின் டிக்கெட் விற்பனை உரிமை தயாரிப்பாளரிடம்தான் உள்ளது
ஒரு படத்தின் டிக்கெட் விற்பனை உரிமை திரையரங்குகளுக்கு கிடையாது. தயாரிப்பாளரிடம்தான் உள்ளது. அனைத்து திரையரங்குகளும் கணிணிமுறைப்படுத்தலுக்கு பிறகு டிக்கெட் விற்பனையில் வெளிப்படைத்தன்மை கிடைக்கும்.
கரோனா நேரத்தில் நடிகர்கள் சிலர் தங்களது சம்பளத்தை குறைத்துள்ளனர். நடிகர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்ற பின் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். திரையரங்குதான் எங்களது முதல் பிரதானம். தற்போதைய சூழலில் ஓடிடியில் படம் வெளியிட வேண்டிய நிலையில் தயாரிப்பாளர்கள் இருக்கிறோம். திரையரங்குகள் திறந்த பிறகு இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.
கரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் பிற மாநிலத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. கரோனா கட்டுக்குள் வந்த பிறகு அரசின் ஒத்துழைப்புடனும் தொழிலாளர் நலன் கருதியும் பெரும் பகுதியான படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடத்த வழி வகை செய்யப்படும்” என்றார்.
இதையும் படிங்க: ’விஷாலுக்கு மதிக்கவே தெரியாது’ - கொந்தளிக்கும் ’பவர் ஸ்டார்’