டோலிவுட்டில் சிறப்பான நடிகராக விளங்கி வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் வாரி குவித்து வருகிறது. நடிகராக மட்டுமின்றி அவர் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் ஆஹா ஓடிடி தளத்தை டோலிவுட்டில் தொடங்கி அதை சிறப்பான வகையில் நடத்தி வருகிறார். தொடர்ந்து பல சிறப்பான படங்களை தனது ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்து அதன்மூலம் நல்ல வருமானத்தை ஈட்டிவருகிறார். டோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களை அவர் தனது ஓடிடி தளமான ஆஹாவில் வெளியிட்டு வருகிறார்.
![ஆஹா ஓடிடி தளத்தின் தொடக்க விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-aha-ott-launch-script-7205221_11022022223116_1102f_1644598876_831.jpg)
இந்நிலையில் தமிழிலும் அவர் தனது ஆஹா ஓடிடி தளத்தின் கிளையை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், பாக்யராஜ், பா.ரஞ்சித், சுரேஷ்கிருஷ்ணா, சிவா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
இந்த ஓடிடி தளத்தில் சரத்குமார் நடித்த இரை, கவின் நடித்த ஆகாஷ்வாணி, சமுத்திரக்கனியின் ரைட்டர், ரமணி vs ரமணி உள்ளிட்டவை வெளியிடப்படவுள்ளன. மேலும் கார்த்திக் இரட்டை வேடங்களில் நடிக்கும் சர்தார் படத்தின் டிஜிட்டல் உரிமையும் ஆஹா வசம் உள்ளது.
![தமிழுக்கென பிரத்யேக ஓடிடி தளம் ஆஹா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-aha-ott-launch-script-7205221_11022022223116_1102f_1644598876_253.jpg)
கேஎஸ்.ரவிக்குமார்
ஓடிடி தளங்கள் சிறிய படங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். திரையரங்குகள் என்றுமே அழியாது. முன்பெல்லாம் ஒரு படம் கிராமங்களை சென்றடைய பல ஆண்டுகள் ஆகும்.
ஆனால் தற்போது ஓடிடி வாயிலாக ஒரே நேரத்தில் சென்றடைகிறது. பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்த ரைட்டர் திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
பா.ரஞ்சித்
தமிழ் படங்களுக்கு என்று தனியாக ஓடிடி தளம் தொடங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. திரையரங்கிற்கு கொண்டு செல்லமுடியாத நல்ல சிறிய பட்ஜெட் படங்கள் நிறைய உள்ளது. மக்களும் ஆர்வம் காட்டுவதில்லை. ஓடிடி நிறுவனங்கள் சிறிய படங்களை வாங்க கவனம் செலுத்த வேண்டும்.
ஜெயம் ரவி
நமக்கு விருப்பப்பட்ட தமிழ்படங்கள பார்க்க இந்த ஓடிடி தளம் உதவியாக இருக்கும்.
பாக்யராஜ்
முன்பெல்லாம் தயாரிப்பாளர்களை ஓடிடி நிறுவனங்கள் தேடி வந்தன. தற்போது தயாரிப்பாளர்கள் ஓடிடி நிறுவனங்களை தேடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நிறைய திறமையாளர்களை உருவாக்கும் தளமாக ஓடிடி உள்ளது.
இதையும் படிங்க : நியாயத்துக்கு பக்கம் நிக்கிறதுதான் நியூட்ரல் - உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி!