தமிழ் திரைத்துறை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் கவுண்டமணி. இன்றைய சமூக வலைதள உலகத்திலும் இவரின் பங்களிப்பு அதிகம். மீம்ஸ் கிரியேட்டர்களின் முடிசூடா மன்னர்களில் இவரும் ஒருவர். காரணம் தனது எதார்த்த நகைச்சுவையாலும், பாரபட்சமில்லாமல் அனைவரையும் கலாய்ப்பதில் இவர் தான் கெத்து.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வல்லகுண்டாபுரம் கிராமத்தில், 1939ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி, கருப்பையா-அன்னம்மாள் என்ற தம்பதிக்குப் பிறந்தவர் இந்த சுப்பிரமணியன் கருப்பையா (எ) கவுண்டமணி. இளமைப் பருவத்தில் மேடை நாடகங்களில் நடித்த இவர், பாமர மக்கள் மொழியில் பேசி அப்போது மக்களைக் கவர்ந்தார்.
அவர் நடித்த நாடகமொன்றில், ஊர் கவுண்டர் என்ற ஒரு கதாபாத்திரத்தின் மூலமாக இவருக்கு கவுண்டமணி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தனது ஊடக நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பாக்யராஜ், “ கவுண்டமணி பாரபட்சமில்லாமல் அனைவரையும் கலாய்ப்பதால், அவருக்கு கவுன்டர் மணி என்று, நான் தான் பெயர் வைத்தேன். காலப்போக்கில் அது கவுண்டமணி என்று மாறியது” எனக் கூறியிருந்தார்.
ஆரம்பத்தில், சர்வர் சுந்தரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்கள் மூலம் தமிழ் திரைத்துறையில் தலைகாட்டிய இவர், ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் 'பத்த வச்சிட்டேயே பரட்டை' என்று இவர் பேசி நடித்த வசனம் கவுண்டமணியை பட்டிதொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது. அந்தப் படத்தில் கமலுக்கு நிகராக ரஜினியை மக்கள் மணங்களில் கொண்டு சேர்த்தது, கவுண்டமணி பேசிய இந்த ‘பரட்டை’ வசனமே.
பின்னர், தனி நகைச்சுவை நடிகராக வலம் வந்த கவுண்டமணிக்கு, இரட்டை மாட்டுவண்டி ஜோடியாக இணைந்தவர்நடிகர் செந்தில். இந்த இரட்டையர்கள் ஜோடி, அடுத்து வந்த இரண்டு தசாப்தங்களுக்கு தமிழ் சினிமாவில் தங்களை தவிர்க்க முடியாத ஜோடியாக நிலைநிறுத்திக் கொண்டது வரலாறு. சில நேரங்களில் உச்ச நடிகர்களின் கால்ஷீட் கிடைத்துவிடும் ஆனால் அவர் கிடைப்பது அரிது. இவர்களின் நகைச்சுவையால் மட்டும் பெரும் வெற்றி கண்ட படங்களும் உண்டு.
மக்களால் என்றுமே மறக்க முடியாத 'கிளாசிக்' படங்களான கரகாட்டக்காரன், நடிகன், மாமன்மகள், முறைமாமன், வைதேகி காத்திருந்தால், சூரியன், மன்னன், உள்ளத்தை அள்ளித்தா, ஜென்டில்மேன், நாட்டாமை என வெற்றிப் படங்களின் வரிசை அடுக்கிக் கொண்டே போகலாம்.
தமிழ் சினிமாவில், அரசியல்வாதிகளையும், அந்த காலக்கட்டதின் சமூக பிரச்னைகளையும் வெளிப்படையாகக் கலாய்க்கும் ஒரே ஆள் கவுண்டமணி தான். யாரை கலாய்த்தாரோ அவர்களே அதை ரசிக்கும் படியான கையாளும் யுத்தி தெரிந்தவர். தன்னுடன் நடிப்பவர், உச்ச நடிகர்களாக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் கலாய்ப்பதில் தலைவர் கில்லி.
தற்போது நடிகர் அஜித்குமார் போல, அவ்வளவு எளிதில் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் இவரைப் பார்த்துவிட முடியாது. ஆனால் எதிர்பார்க்காத இடத்தில் எதிர்பார்க்காமல் வந்து நிற்பார். தற்போதைய் இளம் நகைச்சுவை நடிகர்கள் இவரின் நடிப்புச் சாயல் இல்லாமல் நடிக்கமுடியாது. அதனை அவர்களே சில மேடைகளில் ஒப்புக் கொண்டுள்ளனர்.
எப்போதும் கவுண்டமணி இளமை மாறாமல் இருக்கக் காரணம், இப்போது உள்ள தலைமுறையும் இவரைக் கொண்டாடுவது தான். இவரை வைத்துத் தான் இன்றைய மீம்ஸ் கிரியேட்டர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றால் அது மிகையில்லை.
தமிழ் திரையுலகில் எப்போதும் ‘கவுன்டர் கிங்’ இந்த கவுண்டமணி தான். இவர் இன்று தனது 82ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ‘மிஸ்டர் கிங் கவுண்டமணி’.
இதையும் படிங்க: HBDMohanlal - மலையாள சினிமாவின் லாலேட்டனுக்கு பிறந்தநாள்