இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகை டாப்ஸி கலந்து கொண்டார். அப்போது தனது சினிமா வாழ்க்கை குறித்து அவர் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இந்தியில் பேசச்சொல்லி அங்குள்ள நபர் ஒருவர் கூறியபோது, அங்கிருந்த மக்களைப் பார்த்து 'இங்குள்ள அனைவருக்கும் இந்தி புரிகிறதா' என்று டாப்ஸி கேட்க, பலரும் இல்லை என்பதைப்போல் கூறினர்.
ஆனால் அந்த நபர் பிடிவாதமாக நீங்கள் பாலிவுட் நடிகை என்பதால் இந்தியில் பேசவேண்டும் என்று கூற, 'நான் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடிக்கிறேன், அதனால் தமிழில் பேசவா ' என்று பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ' தென்னிந்திய சினிமா தான் தனக்கு சினிமாவைப் பற்றியும், அதன் அடிப்படைகள் பற்றியும் கற்றுக் கொடுத்தது. எந்நிலையிலும் பாலிவுட்டுக்கான ஒரு படியாக தென்னிந்திய சினிமாவை கருதியதில்லை' என்றும் கூறினார்.
அதன்பின்னர் 'பிங்க்', 'பட்லா' உள்ளிட்ட திரைப்படங்களில் அமிதாப் பச்சனுடன் நடித்த அனுபவத்தைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பெரிய நடிகருடன் நடித்த அனுபவத்தைப் பற்றி கேட்பதை தவிர்த்துவிட்டு, நல்ல கேள்விகளை கேட்குமாறு டாப்ஸி கூறினார்.
இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் நிகழும் பாலியல் வேற்றுமை குறித்து அவர் பேசினார். மேலும், ' பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்களைக் காட்டிலும் முன்னணி ஹீரோயின்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மிகக் குறைவே. ஆண்கள் வாங்கும் சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு கூட பெண்கள் பெறுவதில்லை' என்றும் டாப்ஸி வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'காதம்பரி'யாக மாறப்போகும் 'பிகில்' நடிகை