'இறுதி சுற்று' புகழ் இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் அக்டோபர் 30ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்திரைப்படத்தை சூர்யாவின் சொந்த நிறுவனமான '2D எண்டர்டெயின்மெண்ட்' தயாரித்துள்ளது.
இந்நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவதாக சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது என்று எழுத்தாளர் பிரபஞ்சன் வார்த்தைகள் நம்பிக்கையின் காற்று, கண்ணுக்கு தெரியாத வைரஸ் ஒட்டுமொத்த மனிதகுவத்தின் செயல்பாட்டையும் நிறுத்தி வைத்திருக்கும் குழலில், பிரச்னைகளில் மூழ்கிவிடாமல், நம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போடுவதே முக்கியம்.
இயக்குனர் சுதா கொங்கராவின் பல ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள, சூரரைப் போற்று திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிகச்சிறந்த படமாக நிச்சயம் இருக்கும். மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என்று நம்புகிற திரைப்படத்தை திரையரங்கில் அமர்ந்து என் பேரன்பிற்குரிய சினிமா ரசிகர்களுடன் கண்டுகளிக்கவே மனம் ஆவல் கொள்கிறது.
ஆனால், காலம் தற்போது அதை அனுமதிக்கவில்லை, பல்துறை கலைஞர்களின் கற்பனை திறனிலும், கடுமையான உழைப்பிலும் உருவாகும் திரைப்படம் சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கிய கடமை. எனது 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். இதுவரை எட்டு படங்களைத் தயாரித்து வெளியீடு செய்திருக்கிறது.
மேலும் பத்து படங்கள் தயாரிப்பில் உள்ளன. என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுத்த காலகட்டத்தில், நடிகராக இல்லாமல், தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன். சூரரைப் போற்று திரைப்படம் 'அமேசான் ப்ரைம் விடியோ' மூலம் இணையம்
வழி வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த முடிவை திரையுலகை சார்ந்தவர்களும், என் திரைப்படங்களைத் திரையரங்கில் காண விரும்புகிற பொதுமக்களும், நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த தம்பி தங்கைகள் உள்ளிட்ட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.