சமூகவலைதளமான டிக்டாக்கில் காணொலி பதிவிட்டு பிரபலமடைந்தவர் ஜி.பி. முத்து. இந்தியாவில் டிக்டாக் தடைசெய்யப்பட்டதை அடுத்து இவர் யூ-ட்யூபில் சேனல் தொடங்கி அவருக்கு வரும் கடிதங்கள் குறித்தான காணொலிகளைப் பதிவிட்டுவருகிறார்.
இவரது பேச்சு வழக்கான 'செத்தப் பயலுவளா', 'நாரப் பயலுவளா' 'ஏம்ல இப்டி பண்ணுதீக', 'ரொம்ப சந்தோஷம் நண்பர்களே' நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்தது. இவரது சேனல் பல லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்துவருகின்றனர். ஜி.பி. முத்துவை நெட்டிசன்கள் செல்லமாக 'தலைவரே' என்று அழைத்துவருகின்றனர்.
சமூக வலைதளங்களிலும் இவர் தொடர்பான பல்வேறு மீம்ஸ்கள் வலம்வருவதைப் பார்க்க முடியும். இப்படி டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி. முத்து சமீபத்தில் நகைச்சுவை சேனல்களில் சில நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இப்போது சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார்.
இயக்குநர் சசிகுமார் தயாரிப்பில், யுவன் இயக்கும் திகில் காமெடி திரைப்படத்தில் ஜி.பி. முத்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில், நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடிக்கவுள்ளார். சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து தற்கொலை முயற்சி!