மலையாளத்தில் இயக்குநர் சணல்குமார் சசிதரன் இயக்கத்தில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நிமிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானப்படம் 'சோழா'. இப்படம் வெளியாகும் முன்பே பல சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு விருதுகளைத் தட்டிச் சென்றது. இப்படம் டிசம்பர் 6ஆம் தேதி கேரளாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதனையடுத்து இப்படத்தை தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்ராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பில் 'அல்லி' என்னும் பெயரில் டப் செய்யப்பட்டு டிசம்பர் மாதம் வெளியிட உள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ' எங்கள் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் தயாரித்து வந்தது. தற்போது இந்நிறுவனம் மற்றுமொரு புதிய முயற்சியாக சுயாதீன திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அதன் படி முதல் படமாக 'அல்லி' திரைப்படத்தைத் தயாரித்துள்ளோம்.
முதன் முதலில் 'ஜிகர்தண்டா' படத்தின் கதையை தான் திரைப்படமாக எடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அந்த முயற்சி பலன் தரவில்லை. அதன் பிறகு 'பீட்சா' படத்தின் கதையைத் தயார் செய்து தயாரிப்பாளர் சிவி குமாரிடம் கூறினேன். படத்தின் கதையே கேட்டு அவர் எனக்கும் இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.
இது போன்ற புதிய முயற்சிகளால் தான் நான் இப்போது உங்கள் முன் நிற்கிறேன். அதேபோன்று சுயாதீன படத்தயாரிப்பு முயற்சியும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். எனது முதல் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி, அவர் விரும்பினால் அவரை வைத்து சுயாதீன படத்தை இயக்கவும் நான் தயாராக உள்ளேன்' என்று தெரிவித்தார்.
இதையும் வாசிங்க: HappyBirthdaySuperstar: இது ரஜினி சார் உரசாதீங்க!