'இந்திய சினிமாவின் காட் ஃபாதர்' என்று அழைக்கப்படுகிறவர் சத்யஜித்ரே. இவர் மேற்கு வங்கத்தில் 1921ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி சுகுமார் ராய்-சுபத்திரா ராய் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.
திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், ஓவியர் என பன்முகத் தன்மை கொண்ட சத்யஜித்ரே இந்திய சினிமாவின் ஒரு சாகாவரம்!
சத்யஜித்ரே கொல்கத்தாவிலுள்ள பாலிகுனே அரசு உயர் நிலைப்பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றபின் கவின் கலைகள் மீது ஆர்வம் இருந்ததால் ஓவியம் மற்றும் நுண்கலை பயின்றார்.
ஓவியப்படிப்பு முடிந்தவுடன் 80 ரூபாய் மாத சம்பளத்திற்கு டி.ஜெ. கெய்மர் எனும் ஒரு ஆங்கிலேய விளம்பர நிறுவனத்தில் காட்சிப்படுத்தல் (visualizer) வேலையில் சேர்ந்தார் சத்யஜித்ரே.
இச்சமயத்தில் நார்மன் கிளார் எனும் வெள்ளைக்கார ரே-வுக்கு அறிமுகமானார். அவர் மூலம் சத்யஜித்ரேவுக்கு சினிமா மீதான ஆர்வம் அதிகரித்தது. பின் சத்யஜித்ரேவுக்கு பிஜோய் தாஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் சந்தீப் என்ற ஒரு மகன் பிறந்தார்.
’பதேர் பாஞ்சாலி’ 1955ஆம் ஆண்டு வெளியானபோது இதர இந்தியத் திரைப்படங்களிலிருந்து இப்படம் முற்றிலுமாக வேறுபட்டு இருந்தது. இப்படத்தில் இருந்து சத்யஜித்ரேவின் சினிமா பயணம் தொடங்கியது. தனது கலை சேவைக்காக பல்வேறு நாட்டு விருதுகளை பெற்ற சத்யஜித்ரே, ஆஸ்கார் விருதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.
ஆகையால், இவர் தனது சினிமாவையும் ஆஸ்கார் விருது பரிந்துரை குழுவிற்கு அனுப்பிவைக்கவில்லை. ஆனால் ஆஸ்கார் குழுவினர் இவருடைய சினிமாவை கண்டு வியப்புற்றனர். இதுபோன்ற ஒரு கலைஞனுக்கு ஆஸ்கார் வழங்காமல் இருந்தால் பிற்காலத்தில் ஆஸ்கார் விருதுக்கு மதிப்பு இருக்காது என்று விவாதித்தனர்.
இதனையடுத்து, ஆஸ்கார் விருது குழு சத்யஜித்ரே படங்களை தேர்வு செய்து 'சிறப்பு ஆஸ்கார்' விருது வழங்க முடிவு செய்தது. ஆனால் அப்போது சத்யஜித்ரே வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனை அறிந்த ஆஸ்கார் குழுவினர் இந்தியாவிற்கு வந்து மருத்துவமனையில் அவருக்கு ஆஸ்கார் விருது வழங்கினார்கள். இந்த நிகழ்வு ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஆஸ்கார் விருது பெற்றபோது சத்யஜித்ரேவுக்கு சுய நினைவு இல்லை. மறுநாள் நினைவு வந்தபோது விவரங்களை கேட்டுத் தெரிந்துகொண்டு அவர், 'நான் ஆஸ்கார் விருதுகள் பற்றி எப்போதும் கவலைப்பட்டதுமில்லை; அதை விரும்பியதும் இல்லை. ஆனாலும் என்னைத் தேர்வு செய்து கொடுத்தமைக்கு நன்றி' என்றார்.
விருது பெற்ற அடுத்த சில நாட்களிலேயே, அதாவது 1992ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி ரே இயற்கை எய்தினார். இவரின் உடலை, இந்திய அரசு ராணுவ மரியாதை அளித்து அடக்கம் செய்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு கலைஞன் வாழ்ந்த இந்நாட்டில் நாமும் வசிப்பது பெருமையே!