பிரபலப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திரையுலகினரும் ரசிகர்களும் கூட்டுப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சூழலில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், உயிர் காக்கும் கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், எஸ்.பி.பி பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் 'உஷா பூஜை சிறப்பு' பிரார்த்தனை நடைபெற்றது.
இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கணேஷ் திருவரப்பு, சுகுனன், யாது கிருஷ்ணன் ஆகியோர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய 'சங்கரா நட சாரேரா' பாடலை இசைக் கருவிகள் கொண்டு வாசிக்க, ஐயப்பனுக்கு பூஜை செய்யபட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கிய மலையாள மாதமான சிங்கத்திற்கான மாதாந்திர பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது.