பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14ஆம் தேதி மோசமடைந்தது. இதனால் எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவ்வப்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப். 3) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட்-19 தொற்று காரணமாக எம்ஜிஎம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசம், எக்மோ கருவிகள் உதவியுடன் இருந்து வருகிறார்.
அவர் தற்போது சீரான நிலையில் உள்ளார். அவர் விழிப்புடன், சொல்வதைப் புரிந்து பதில் சொல்லும் நிலையில், தொடர்ந்து நல்ல மருத்துவ ரீதியிலான முன்னேற்றத்தைக் காட்டி வருகிறார். எங்களது மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து அவரைக் கண்காணித்து வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று எஸ்பிபி உடல்நிலைக் குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண் இன்று (செப். 3) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "அனைவருக்கும் வணக்கம். நான்காவது நாளாக தொடர்ந்து அப்பா சீரான நிலையிலிருந்து வருகிறார். இந்த வார இறுதியில் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடவுளின் ஆசீர்வாதத்தோடும், உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளோடும், திங்கள்கிழமைக்குள் கண்டிப்பாக ஒரு நல்ல முன்னேற்றம் இருக்கும் என நான் நம்புகிறேன். அதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். அனைவருக்கும் நன்றி" என்றுள்ளார்.
இதையும் படிங்க...செமஸ்டருக்கான கட்டணங்களை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்!