எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துவரும் படம் தமிழரசன். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இவர்களுடன் சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட், யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி. மகேந்திரன், கதிர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுகொண்டிருக்கிறது.
இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் பாடகர் யேசுதாஸ் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு பாடலை பாடியுள்ளார். தற்போது இந்தப் படத்திற்காக எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் ஒரு மெலோடி பாடலை பாடியுள்ளார்.
சமீப காலமாக இளையராஜா இசையில் எஸ்.பி.பி. குரல் கேட்க முடியாத ஒரு சூழல் இருந்துவந்த நிலையில் இந்தப் பாடல் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது .
இளையராஜா இசையில் எஸ்.பி.பி. பாடிய மெலோடி பாடல்கள் அனைத்தும் ஆல்டைம் ஹிட். அதே வரிசையில் பழனிபாரதி எழுதியிருக்கும் “வா வா என் மகனே“ என்னும் இந்தத் தாலாட்டுப் பாடலும் மிகப்பெரிய ஹிட்டாகும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.
இப்பாடல் பதிவின்போது இசைஞானியும், எஸ்.பி.பி.யும் பழைய நிகழ்வுகளை நட்போடு பகிர்ந்து கொண்டார்கள். விரைவில் இப்படத்தின் பாடல்களை படக்குழு வெளியிட உள்ளது.