வேலூர்: 'நாட்டாமை' படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியிருப்பதைத் தொடர்ந்து நடிகர் சரத்குமாருக்கு அவரது கட்சித் தொண்டர்கள் மகுடம் சூட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சூப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மாறுபட்ட நடிப்பில் 1994ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து சூப்பர் ஹிட்டான படம் 'நாட்டாமை'.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்த இந்தப் படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. செளத்ரி தயாரித்திருந்தார். இசை - சிற்பி. இரண்டு வேடங்களில் சரத்குமார், விஜயகுமார், மனோரமா, குஷ்பூ, மீனா, ராஜா ரவீந்திரன், சங்கவி, பொன்னம்பலம், கவுண்டமணி, செந்தில் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள்.
கிராமத்து பின்னணியில் குடும்ப கதையாக அமைந்திருந்த இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. காமெடி, செண்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களுடன் சிறந்த ஜனரஞ்சக படமாக இருந்த நாட்டாமை படம் வெளியாகி (நவம்பர் 2ஆம் தேதியுடன்) 25 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இதையடுத்து நாட்டாமை படம் 25வது ஆண்டு விழா கொண்டாட்டம் வேலூரில் நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சி (சமக) தலைவரும், நடிகருமான சரத்குமார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வேலூர் மாவட்டம் வந்தார். அப்போது வேலூர் மாவட்ட சமக தொண்டர்கள் சார்பில் சரத்குமாருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விழாவில், சரத்குமாருக்கு தொண்டர்கள் மகுடம் ஒன்றை சூட்டினர். பின்னர் கேக் வெட்டி அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நாட்டாமை படத்தின் இரண்டாம் பாகத்தில் சரத்குமார் நடிக்க வேண்டும் என தொண்டர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
நாட்டாமை படத்தில் வயதான தோற்றத்தில் ஊர் நாட்டாமையாகவும், அவரது தம்பியாக துறுதுறுப்பான இளைஞனாகவும் என இரு மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பார் சரத்குமார்.
படத்தின் பிளாஷ் பேக் காட்சியில், நாட்டாமையாகவும், சரத்குமாரின் தந்தையாகவும் தோன்றும் விஜயகுமார், 'நீதி வழங்கும்போது அண்ணன், தம்பி, சொந்தம், பணக்காரன், ஏழை என எதுவும் பார்க்காமல் நியாத்தை மட்டும் பார்க்கவேண்டும்' என அழுத்தமாக சொல்வார். அதைக் கடைபிடித்து தீர்ப்பு வழங்குவதாகட்டும், சந்தையில் ஏற்படும் பிரச்னை முதல் ஊர் மானத்தை காக்க சிலம்பம் போட்டியில் தம்பியை சண்டையிடச் செய்வது என அசல் நாட்டாமையாகவே வாழ்ந்திருப்பார் சரத்குமார்.
சூப்பர் ஹிட்டான பல்வேறு படங்கள் தற்போது இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டுவரும் நிலையில், நாட்டாமை படத்தையும் இரண்டாம் பாகமாக எடுக்குமாறு கூறிய தொண்டர்களின் விருப்பத்தை சரத்குமார் நிறைவேற்றுவாரா என்பதற்கு காலம்தான் பதில் கூற வேண்டும்.