நடிகர் சிவகார்த்திகேயன் 'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்துக்கு 'அயலான்' என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
சயின்ஸ் பிக்ஷன் ஜார்னரில் உருவாகி வரும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா, 'அயலான் படத்தின் தலைப்பிற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திப்பது மகிழ்ச்சி. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தலைப்பை அறிவித்தது எங்களுக்குப் பெருமை. படத்தின் தலைப்பிற்காக அவர் உருவாக்கிய ஒரு இசைத்துணுக்கே அபாரமானதாக இருந்தது. அவரது இசை இப்படத்தின் முதுகெலும்பாக இருக்கும்.
'அயலான்' என்பது படத்தின் கருவை மையப்படுத்திய தலைப்பு. அயலான் என்றால் ஏலியன் என்பது அர்த்தம். சுவாரஸ்யம் நிறைந்த படமாக இருப்பதால், படம் குறித்து எந்தத் தகவலும் இப்போது கூறமுடியாது. தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
தமிழில் பிரமாண்டமான சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகி வருவதால், படத்தில் அதிகளவிலான விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது. இதனால் படப்பிடிப்பின் போதே போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் தமிழ் சினிமாவிற்கே மிகச் சிறந்ததொரு படைப்பாக இருக்கும்' என்றார்.