சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ளது அண்ணா உயிரியல் பூங்கா. இந்தப் பூங்காவில் பார்வையாளர்கள் விலங்குகளை கண்டு களித்து மகிழ்வது மட்டுமல்லாமல் அந்த விலங்குகளை தத்தெடுக்கும் திட்டமும் உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் தாங்கள் விரும்பும் விலங்குகளை தத்தெடுத்து அவற்றுக்குத் தேவையான உணவு, பராமரிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
இந்தத் திட்டத்தில் பல்வேறு பிரபலங்கள் பல விலங்குகளை தத்தெடுத்து அவற்றுக்கான செலவுகளை தாங்களே ஏற்றுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் பூங்காவில் உள்ள 14 வெள்ளைப் புலிகளில் ஒன்றான 'அனு' என்ற வெள்ளைப் புலியை கடந்த 2018ஆம் ஆண்டு தத்தெடுத்தார்.
இந்தப் புலியின் தத்தெடுப்பு காலம் கடந்த 1ஆம் தேதி முதல் முடிவடைந்ததால், மீண்டும் இந்தப் புலியை அடுத்த நான்கு மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு நிலவிவரும் இந்த நேரத்திலும் தான் தத்தெடுத்த வெள்ளைப் புலியை கைவிடாமல் பராமரிக்க முன்வந்துள்ள சிவகார்த்திகேயனின் இந்த மனித நேயச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க... பண்டிகைக்கு வெளியாகும் சிவாவின் அடுத்த திரைப்படம்