ஹிட் பாடல்கள் மூலம் இளைஞர்களின் குரலாகத் திகழ்பவர் பாடகர் சித் ஸ்ரீராம். அவரது மாயக்குரலால் பெண்களின் கனவு நாயகனாகவும் வலம் வருகிறார். சென்னையில் பிறந்த சித் ஸ்ரீராம், இளம் வயதில் இருக்கும் போதே அவரது பெற்றோர் அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு இடம் பெயர்ந்தனர்.
அவரது தாயார் கர்நாடக இசைப் பாடகி என்பதால், அவரது ரத்தத்தில் இசை ஆர்வம் கலந்திருந்தது. இசை மீதான மோகத்தால், பெர்க்லீ இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார்.
பின்னர், இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதல் படமான கடல் படத்தில் அவர் பாடிய பாடலுக்கு, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, அவர் கால் பதித்த இடங்கள் அனைத்திலும் வெற்றியைக் கண்டார்.
பல ஹிட் பாடல்கள் மூலம், தென்னிந்தியாவின் முன்னணி பாடகராக மாறிவிட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும், அவரது பாடலுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. இவரது இசைப் பயணத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து, கௌதம் மேனனின் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் இடம்பெற்ற “தள்ளிப் போகாதே” பாடல் முக்கிய பங்கு வகித்தது.
பலரின் ஹலோ ட்யூனாக தற்போது வரை இருந்து வருகிறது. இந்தப் பாடல் வெளியான சில நாள்களிலேயே யூடியூப் இணையதளத்தில் பல லட்சம் முறை கேட்கப்பட்டது. அதே போல, 2017இல் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ என்னும் படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய ‘மறுவார்த்தை பேசாதே’ என்னும் பாடல் பட்டித்தொட்டி எங்கும் எகிறத் தொடங்கியது.
மீண்டும் மீண்டும் அந்தப் பாடலை ரிப்பீட் மோட்டில் ரசிகர்கள் கேட்கத் தொடங்கினர். மிக இளம் வயதில் இசைத் துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருக்கும் பாடகர் சித் ஸ்ரீராம், இன்று(மே.19) தனது 31ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.