செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணியாற்றியதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரித்த இத்திரைப்படம் பல்வேறு நிதிப் பிரச்சினைகளால் வெளியாகாமல் இருந்தது. கடந்தாண்டு கரோனா தொற்றுப் பிரச்சினையால் படத்தின் வெளியீடு தாமதமாகிக்கொண்டே போனது. இறுதியாக தனது பிறந்தநாளான மார்ச் 5ஆம் தேதி வெளியாகும் என செல்வராகவன் அறிவித்தார். இந்த திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் நேற்று (மார்ச்.02) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்காக எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் 2 கோடியே 42 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், படத்தை வெளியிடுவதற்கு முன்னால் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் கடனை கொடுத்து விட்டதாகவும், மீதமுள்ள ஒரு கோடியே 24 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்காமல் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் படம் வெளியிட இடைக்கால தடை விதித்தனர்.
இதனையடுத்து தயாரிப்பு நிறுவனம் சம்பந்தப்பட்ட தரப்பிற்கு உரிய பணத்தை கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் படத்திற்கு இருந்த சிக்கல் தீர்ந்தது. இதனையடுத்து வரும் வெள்ளியன்று நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.