இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனின் மகளும் பிரபல பாடகியுமான தீ, பாடகர் 'தெருக்குரல்' அறிவு இருவரும் இணைந்து பாடி சமீபத்தில் வெளியிட்ட சுயாதீனப் பாடல் 'எஞ்சாயி எஞ்சாமி'. பூர்வக்குடி மக்கள், இயற்கை வளம் குறித்து அறிவு எழுதி, இருவரும் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடல், அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்து, பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
முன்னதாக அஸ்வின் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் இப்பாடலை வெகுவாக ரசித்து பாராட்டிய நிலையில், தற்போது இயக்குநர் செல்வராகவன் "என்ன ஒரு அழகான பாடல்! என்ன ஒரு அழகான பாடல் உருவாக்கம்! பாடகர் அறிவு, பாடகி தீ மற்றும் மொத்த குழுவுக்கும் எனது பாராட்டுகள்" எனப் புகழ்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் நடிகர் துல்கர் சல்மான் "மிக அற்புதமான பாடல், அதே அளவுக்கு சிறந்த வீடியோவாகவும் வெளிவந்துள்ளது. கடந்த சில நாள்களாக இப்பாடலை இடைவிடாமல் கேட்டு வருகிறேன். ஒவ்வொரும் முறையும் இன்றுவரை புது உணர்வுகளை இப்பாடல் தருகிறது" எனத் தெரிவித்துள்ளார். மேலும் பாடகி தீ, பாடகர் அறிவு இருவரையும் வெகுவாகப் பாராட்டியுள்ள அவர் இப்பாடலுக்கு தான் அடிமையாகி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய டாப் இயக்குநர்கள்!