மதுரை: டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவான அன்பே வா திரைப்படத்தை திரையரங்கில் ரசிகர்களுடன் அமைச்சர் செல்லூர் ராஜு கண்டு ரசித்தார்.
மறைந்த முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர், சரோஜா தேவி நடிப்பில் வெளியான ‘அன்பே வா திரைப்படம், டிஜிட்டல் ஒலி-ஒளியுடன் நவீன தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முழுவதிலும் 200 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
நடிப்பாலும், அரசியலாலும் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர்தான் எம்.ஜி.ஆர். இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் என்றே சொல்லலாம். அதுவும் ஏ.சி திருலோகசந்தர் இயக்கத்தில் 1966-ஆம் ஆண்டு வெளிவந்த அன்பே வா திரைப்படம் அனைவராலும் மறக்க முடியாத திரைப்படமாகவே இன்றளவும் இருக்கின்றது. ஏ.வி.எம் நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம் இதுவாகும்.
![sellur raju watched digitalized mgr anbe va movie](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-05-anbevaa-sellur-raju-script-7208110_19122020224622_1912f_1608398182_706.png)
காலத்தை தாண்டியும் ரசிகர்கள் மனதில் வாழக்கூடிய இப்படத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படி காதல், நகைச்சுவை என மக்களின் மனதை கொள்ளை கொண்ட 'அன்பே வா' திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் வெளியாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பே இத்திரைப்படம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடத் தயாராகிவிட்ட நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் 'அன்பே வா' திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை, நெல்லை, ராமநாதபுரம் என பல்வேறு மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்திற்கு, அந்தந்த பகுதி எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள், அதிமுக தொண்டர்கள் பலர் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் அமர்க்களப்படுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை கேகே நகர் பகுதியிலுள்ள சினிப்பிரியா திரையரங்கத்தில் ‘அன்பே வா’ திரைப்படம் திரையிடப்பட்டு இருந்தது. இதனை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு ரசிகர்களோடும், அதிமுக நிர்வாகிகளோடும் அமர்ந்து உற்சாகமாக கண்டு ரசித்தார்.